ஆர்லாண்டோ தாக்குதலின்போது 70 பேரின் உயிரை காப்பாற்றிய இந்தியருக்கு ராஜமரியாதை.

ஆர்லாண்டோ தாக்குதலின்போது 70 பேரின் உயிரை காப்பாற்றிய இந்தியருக்கு ராஜமரியாதை.
imran_2899357f
கடந்த 12ஆம் தேதி அமெரிக்காவின் ஆர்லாண்டா நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் கண்மூடித்தனமாக தீவிரவாதி ஒருவன் சுட்டதில் 50 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் உலகையே அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் இந்த தாக்குதல் நடந்தபோது 70 பேர்களின் உயிரை இந்தியர் ஒருவர் காப்பாற்றியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இவர் தற்போது அமெரிக்காவின் ஹீரோ என்று புகழப்பட்டு வருகிறார்.

இம்ரான் யூசுப் என்ற அவர் இதுகுறித்து சிபிஎஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தாக்குதல் நடந்த கேளிக்கை விடுதியில் நான் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறேன். தீவிரவாதி ஒமர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டபோது நானும் கூட்டத்தில் சிக்கிக் கொண்டேன். பயத்தில் மக்கள் அங்கும் இங்கும் அலறி ஓடினர்.

அந்த நேரத்தில் ராணுவத்தில் பணியாற்றிய அனுபவமும் தைரியமும் எனக்கு கைகொடுத்தது. நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டிருந்த கூட்டத்தை தாண்டிக் குதித்து சென்று விடுதியின் பின்பக்க கதவை திறந்துவிட்டேன். அங்கிருந்து ஒவ்வொருவராக 70 பேரை விடுதியைவிட்டு வெளியேற்றினேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இம்ரான் யூசூப் அவ்வாறு பின்பக்க கதவை திறந்திருக்காவிட்டால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியிருக்கும், தனது உயிரை பணயம் வைத்து 70 பேரை இம்ரான் யூசுப் காப்பாற்றியுள்ளார் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இம்ரான் யூசுபின் மூதாதையர்கள் இந்தியாவில் இருந்து கயானாவில் குடியேறி அங்கிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். யூசுபின் தாய், பாட்டி ஆகியோர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், அந்த மதத்தையே இம்ரான் யூசுபும் பின்பற்றுகிறார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply