அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா நகரை சேர்ந்த ஜொனாதன் கெல்லர் என்பவர் கடந்த 17 வருடங்களாக தினமும் செல்பி புகைப்படங்கள் எடுத்து, சேகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி நின்றுகொண்டு, முகத்தை மட்டும் புகைப்படங்கள் எடுத்துள்ளார் இந்த செல்பி பிரியர். இதுவரை 5,840 புகைப்படங்களை எடுத்திருப்பதாகவும், இந்த பழக்கம் இவருக்கு தனது 22 வயதில் இருந்தே ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது இவருக்கு 39 வயதாகிறது. கடந்த 17 ஆண்டுகளாக செல்பி புகைப்படம் எடுக்கும் இவர் சாகும்வரை புகைப்படம் எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேதி வாரியாக வரிசையாகப் புகைப்படங்களை அடுக்கி வைத்திருக்கிறார். இவற்றை எல்லாம் மூன்றரை நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவாக மாற்றியிருக்கிறார் ஜொனாதன். “நம் உடலில் தினசரி மாற்றம் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. ஆனால் அவற்றை மிகத் துல்லியமாக நம்மால் பார்க்க முடிவதில்லை.
தினமும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டால், என்னுடைய வளர்ச்சி, மாற்றம் போன்றவற்றை உணர்ந்துகொள்ள முடியும். என்னுடைய இந்த ப்ராஜக்ட் பற்றி ஆரம்பத்தில் என் காதலிக்கே சரியாகப் புரியவில்லை. யார் என்ன நினைத்தாலும் சாகும் வரை புகைப்படம் எடுப்பதை நிறுத்தப் போவதில்லை’’ என்கிறார் ஜொனாதன்.