‘தொடரி’ திரைவிமர்சனம். தனுஷூக்கு ஹாட்ரிக் தோல்வி

‘தொடரி’ திரைவிமர்சனம். தனுஷூக்கு ஹாட்ரிக் தோல்வி

thodari1தனுஷ் நடித்த மாரி, தங்கமகன் ஆகிய இரண்டு படங்களுமே வசூல் அளவில் தோல்வி அடைந்த நிலையில் இந்த படமும் அவருக்கு தோல்விப்படமாகவே அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தனுஷின் நடிப்பு வழக்கம்போல் பிரமாதமாக இருந்தாலும் பிரபுசாலமனின் தொய்வான திரைக்கதையால் வண்டி பிரேக் டவுன் ஆகி நிற்கின்றது.

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரெயில் கேண்டீனில் நாயகன் தனுஷ் வேலை செய்கிறார். நடிகைக்கு மேக்கப் போடும் கீர்த்தி சுரேசும் அதே ரெயிலில் வருகிறார். கீர்த்தி சுரேஷை பார்த்தவுடனே அவள் அழகில் மயங்கிவிடுகிறார் தனுஷ். பாட்டு பாடுவதில் ஆர்வம் உள்ளவரான கீர்த்தி சுரேஷிடம் தனக்கு பாடலாசிரியர்களைத் தெரியும் என்று பொய் சொல்லி தன்னுடைய காதல் வலையில் சிக்க வைக்கிறார்.

இந்நிலையில், அதே ரெயிலில் பயணம் செய்யும் மந்திரி ராதாரவியின் பாதுகாப்புக்கு வரும் கருப்பு பூனைப்படையை சேர்ந்த ஹரிஷ் உத்தமனுக்கும், தனுஷுக்கும் இடையில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் தனுஷின் காதலியான கீர்த்தி சுரேஷை கொன்றுவிடுவதாக ஹரிஷ் உத்தமன் மிரட்ட, பயந்துபோய் கீர்த்தி சுரேஷ் ரெயில் என்ஜின் அறையில் பதுங்கிக் கொள்கிறார்.

தனுஷையும் ஒரு அறையில் போட்டு பூட்ட, அங்கிருந்து தனுஷ் தப்பித்து கீர்த்தி சுரேஷை தேடி ரெயிலுக்குள் அலைகிறார். இந்நிலையில், ரெயில் என்ஜின் டிரைவர் திடீரென இறந்துபோக, ரெயில் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக செல்கிறது. ரெயிலை தீவிரவாதிகள் கடத்திவிட்டதாக மீடியாவில் பரபரப்பு செய்திகள் போய்க்கொண்டிருக்க, தனுஷோ தனது காதலியை தேடி ரெயிலுக்குள் அலைகிறார். ரெயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் ரெயிலை நிறுத்துவதற்கான பணிகளில் தீவிரமாக களமிறங்குகிறார்கள்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ரெயிலை அதிகாரிகள் நிறுத்தினார்களா? தனுஷ் தனது காதலியை கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

கேண்டீன் ஊழியராக தனுஷ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். படம் முழுக்க ரெயிலுக்குள்ளேயே நடப்பதால் இவரது நடிப்புக்கு ஏற்ற தீனி இந்த படத்தில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படம் முழுக்க ஒரே உடையணிந்து வந்தாலும், காட்சிக்கு காட்சி தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகாக இருக்கிறார். படத்தில் முதல்பாதி முழுக்க தனுஷுடன் டூயட் பாடுவது, ரொமான்ஸ் பண்ணுவது என வரும் இவர், இடைவேளைக்கு பிறகு ரெயில் என்ஜினில் இவரது கதாபாத்திரத்தை பூட்டி வைத்துவிடுகிறார்கள். அதன்பிறகு, அவர் நடிப்பதற்கான வாய்ப்பு இல்லை.

பிரபு சாலமன் படங்களில் எப்போதும் தம்பிராமையாவின் காமெடிக்கு தனி மவுசு இருக்கும். ஆனால், இந்த படத்தில் தம்பி ராமையாவின் காமெடி பெரிதாக எடுபடவில்லை. காமெடிக்கு கூடவே கருணாகரன், தர்புகா சிவா, கும்கி அஸ்வின் என ஒரு கூட்டணி இருந்தாலும் காமெடி ரசிக்கும்படி இல்லை. மந்திரியாக வரும் ராதாரவி, தனது எதார்த்தமான நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார். கருப்பு பூனை படைவீரராக வரும் ஹரிஷ் உத்தமன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். வில்லன் என்றால் ரசிகர்கள் வெறுக்கும்படியாக இருக்கவேண்டும். அவ்வாறே இருக்கிறார் ஹரிஷ் உத்தமன்.

மற்றபடி, ரெயில்வே போலீஸ் அதிகாரியாக வரும் கணேஷ் வெங்கட்ராமன், கட்டுப்பாட்டு அதிகாரிகளாக வரும் சின்னி ஜெயந்த், ஏ.வெங்கடேஷ், என்ஜின் டிரைவராக வரும் ஆர்.வி.உதயகுமார், டிக்கெட் பரிசோதகராக வரும் இமான் அண்ணாச்சி, டிவியில் பேசும் படவா கோபி, ஞானசம்பந்தம், பட்டிமன்றம் ராஜா ஆகியோர் சிறு சிறு கதாபாத்திரங்களாக வந்தாலும் தங்களது நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் பிரபு சாலமன், பயணத்தை மையமாக வைத்து தனது வழக்கமான பாணியில் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு படத்தை முழுக்க ரெயிலில் எடுக்கமுடியுமா? என்பதற்கு சவால் விடும்படியாக இவரது படைப்பு உள்ளது. படத்தின் இடைவேளைக்கு சற்று முன்னர்தான் கதையே ஆரம்பிக்கிறது. ஆகையால், படத்தின் முதல் பாதி காமெடி, காதல் என இழுஇழுவென கதையை இழுத்திருக்கிறார். இடைவேளைக்கு பிறகு ரெயிலைப்போன்று கதையும் வேகமெடுக்கிறது. முதல்பாதியை குறைத்திருந்தால் படம் கொஞ்சம் ரசிக்கும்படியாக இருக்கும்.

அதேபோல், பிரபு சாலமன் படங்களில் இயற்கை காட்சிகள் எல்லாம் அழகாக இருக்கும். அதேபோல் இந்த படத்திலும் இயற்கை காட்சிகளை வெற்றிவேல் மகேந்திரனின் கேமரா அழகாக படம் பிடித்திருக்கிறது. டி.இமான் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் வேகம் கூட்டியிருக்கலாம். படத்தில் ‘போன உசுரு வந்துடுச்சே’ பாடல் ரசிக்கும்படி இருந்தாலும், அதன் பின்னணியை காட்சிப்படுத்திய விதம் ரசிக்க விடாமல் செய்துவிட்டது.

மொத்தத்தில் ‘தொடரி’ வேகமில்லா பயணம்.

Leave a Reply