தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் எவரும் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும், தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் நிலையிலும் இவை எவற்றுக்கும் மதிப்பளிக்காமல் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையிலான குழு, மாநாட்டில் பங்கேற்றிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தக் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் வரும் 15 ஆம் தேதி அன்று தமிழகமெங்கும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழர்களின் உணர்வுகளை எடுத்துச் சொல்லும் வகையில் அமைந்திருந்தபோதிலும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல் குறித்து அதில் எதுவும் சொல்லப்படாதது வருத்தமளிக்கிறது. ஈழத் தமிழர் பிரச்சனைக்கு முதன்மை கொடுக்க வேண்டும் என்கிற அதே வேளையில், இந்திய மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகளையும் நாம் அலட்சியப்படுத்திவிடக் கூடாது.

எனவே, அதைப் பற்றியும் இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

தமிழக மக்களின் எதிர்ப்பை மீறி காமன் வெல்த் மாநாட்டிற்குச் சென்றிருக்கும் இந்தியக் குழுவினர் காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக ராஜபக்சேவைத் தேர்ந்தெடுத்தால் அதைவிட கொடுமையான துரோகச் செயல் வேறெதுவும் இருக்க முடியாது.

எனவே, ராஜபக்சே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை இந்தியக் குழு ஆதரிக்கக் கூடாது எனவும், இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன் மொழிய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவு சின்னத்தை சுற்றி அமைத்துள்ள சுற்று சுவரை திடீரென காவல் துறையினர் இன்று இடித்து தரைமட்டம் ஆக்கி உள்ளனர். பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தையும் கைப்பற்றி உள்ளனர். பிரமாண்டமாக நிறுவப்பட்டு இருந்த பெயர் பலகையையும் இடித்து நொறுக்கி உள்ளனர். இந்த நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

வயது முதிர்ந்த நிலையில் பழ.நெடுமாறனை திடீரென கைது செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரையும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். முள்ளிவாய்க்கால் முற்றம் என்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தியதாகும். ஆதனால் தமிழக அரசு இடிக்கப்பட்ட இடத்தில் சுற்று சுவரை எழுப்பி தர வேண்டும். பூங்காவிற்கான இடத்தையும் ஒப்படைக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

Leave a Reply