‘தூங்காவனம்’ திரைவிமர்சனம்
கமல்ஹாசன், த்ரிஷா, நடித்த தூங்காவனம்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் குறித்த விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.
போலீஸ் ஸ்பெஷல் அதிகாரியான கமல், சின்ன சின்ன திருட்டுக்கள் செய்யும் யூகிசேதுவுடன் சேர்ந்து 10 கிலோ கோகையினை போதை மருந்து கும்பல் ஒன்றிடம் இருந்து கைப்பற்றுகிறார். அந்த கோகைனில் பாதியை தன்னிடை கொடுக்க யூகிசேது வற்புறுத்தும் நிலையில் கோகைனை பறிகொடுத்த பிரகாஷ்ராஜ், கமல் மகனை கடத்தி வைத்துக்கொண்டு கோகைனை கொடுத்தால்தான் மகனை விடுவேன் என மிரட்டுகிறார்.
வேறு வழியில்லாமல் கோகைன் உள்ள பேக்கை எடுத்து கொண்டு பிரகாஷ்ராஜ் வரச்சொன்ன இரவு விடுதிக்கு செல்கிறார் கமல். அங்கு ஆண்கள் டாய்லெட்டில் கோகைன் பேக்கை மறைத்து வைத்துவிட்டு பிரகாஷ்ராஜிடம் தன்னுடைய மகனை கண்ணில் காண்பித்தால் மட்டுமே கோகைன் பேக்கை தருவேன் என கூறுகிறார். பிரகாஷ்ராஜ், கமலின் மகனை காண்பித்தவுடன் 10 நிமிடங்களில் பேக்குடன் வருவதாக கூறும் கமல், ஆண்கள் டாய்லெட்டில் தான் மறைத்து வைத்த பேக், காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
இதனிடையே போலீஸ் அதிகாரியான த்ரிஷா, அந்த பேக்கை ஆண்கள் டாய்லெட்டில் இருந்து பெண்கள் டாய்லெட்டுக்கு மாற்றி வைத்துவிடுகிறார். கமல், போதைக்கும்பலுக்கு உடந்தை என்று எண்ணி கமலை பிடிக்க முயற்சிக்கின்றார். அவருக்கு இன்னொரு போலீஸ் அதிகாரியான கிஷோரும் உதவுகிறார். ஒருபுறம் மகனை காப்பற்ற பேக்கை தேடும் கமல், இன்னொரு புறம் தன்னை விரட்டும் த்ரிஷா-கிஷோரிடம் இருந்தும் தப்பித்துவருகிறார். இறுதியில் கோகைன் பேக் என்ன ஆயிற்று? மகனை கமல் காப்பாற்றினாரா? என்பதுதான் கிளைமாக்ஸ்
கமலுக்கு இதுபோன்ற கேரக்டர்களில் நடிப்பது ஒரு சாதாரண விஷயம். போகிற போக்கில் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்துகிறார். மகனை காப்பாற்ற துடிப்பது, த்ரிஷா மற்றும் கிஷோருடன் சண்டை, பிரகாஷ்ராஜை சமாதானப்படுத்துவது, என அவருடைய நடிப்பிற்கு செம தீனி.
கமலைவிட இந்த படம் த்ரிஷாவுக்கு மிக முக்கியமான படம். மேக்கப்பே இல்லை என்றாலும் கெத்தான போலீஸாக வருகிறார். கமலுக்கு இணையாக சண்டைபோடுவது கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும் அதை சிறப்பாக செய்துள்ளார்.
மதுஷாலினி, ஆஷா சரத், உமா ரியாஸ்கான் ஆகியோர்களுக்கு சின்ன சின்ன வேடங்கள்தான் என்றாலும் நல்ல நடிப்பு
பிரகாஷ்ராஜ் இன்னும் எத்தனை படத்தில்தான் இதே பாணியில் வில்லத்தனம் செய்வார் என தெரியவில்லை. ஆனால் கிஷோரும், சம்பத்தும் கலக்கியுள்ளனர்.
சானு வர்கசியின் கேமரா மற்றும் ஷான் முகம்மதுவின் எடிட்டிங் ஆகியவை கச்சிதம்
ஜிப்ரான் இசையில் ஒரே ஒரு பாடல் என்றாலும் அந்த பாடலும் இதமாக உள்ளது. பின்னணி இசையில் அதிகபட்ச உழைப்பை கொடுத்துள்ளார்.
ராஜேஷின் திரைக்கதை ஆங்காங்கே திருப்பங்கள், டுவிஸ்ட்டுக்கள், ஆகியவை கச்சிதமாக உள்ளது. ஆனால் படம் முழுவதையும் ஒரே இரவுவிடுதியில் வைத்து எடுத்துள்ளதால் திரும்ப திரும்ப ஒரே காட்சி வருவது போன்ற பிரம்மை ஏற்படுகிறது. மேலும் இந்த படம் ஏ செண்டர் ஆடியன்ஸ்களை மட்டுமே கவரும் வகையில் உள்ளது.
ஆனாலும் மொத்தத்தில் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ள ‘தூங்காவனம்’ படக்குழுவினர் நிச்சயம் ரசிகர்களின் மனதில் நீங்காமல் இருப்பார்கள் என்பது மட்டும் உறுதி.