போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக மட்டுமே தூய்மை இந்தியா திட்டம்’ பயன்படுவதாகவும் உண்மையில் இந்தியாவை தூய்மைப்படுத்த இந்த திட்டம் சிறிதும் உதவவில்லை என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, டெல்லியில் நடந்த நேரு பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், ”காங்கிரஸ் சில தவறுகள் செய்திருக்கலாம். ஆனால், அது காங்கிரசின் கொள்கையில் ஏற்பட்ட குறைபாடு இல்லை. கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் காங்கிரஸ் தொடர்ந்து பாடுபடும்.
‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் நாட்டில் இப்போது அனைவரும் தெருவை சுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் எந்த வேலையும் நடைபெறவில்லை. இது போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வேலையாகவும் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும் வேலையாகவும் மட்டுமே இருக்கிறது. தற்போதுள்ள கட்சியினர் மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நாடு முழுவதும் விஷக்கிருமிகளை பரப்பி வருகின்றனர்” என்றார்.
இதற்கு பதிலளித்துள்ள பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நளின்கோலி, ”ராகுலின் அரசியல் வாழ்க்கையே போட்டோவிற்கு போஸ் கொடுப்பதை வைத்து தான் இருக்கிறது. உள்ளூர் ரயில்களில் பயணம் செய்வது, தலித் வீடுகளுக்கு சென்று நலம் விசாரிப்பது என அனைத்தையும் போட்டோ எடுத்து பிரசுரித்து தான் அவர் அரசியல் செய்து வருகிறார்” என்றார்.