சமீபத்திய புள்ளி விவரப்படி மலேரியாவின் தாக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது. ‘பிளாஸ்மோடியா’ என்னும் ஓரணு உயிரிதான் இந்த நோயை உண்டாக்குகின்றது. ரத்தத்தில் நுழையும் இந்த ஓரணு உயிரிகள் குறுகிய நேரத்துக்குள் மனிதனின் ஈரலை அடைந்துவிடும்.
அது ஈரல் செல்லுக்குள் புகுந்தாலே போதும். அது பலமிக்கதாக மாறி, புகுந்த உயிரணுவைப் பிளந்து வெளியே வந்து ரத்தத்துடன் கலந்து விடும். பிளாஸ்மோடியா எனும் நுண்ணுயிர் இனத்தின் நான்கு வகைகள் மட்டுமே மலேரியா நோயை உண்டாக்கும் திறன் கொண்டவை. அந்த நான்கு வகைகளிலும் ‘பிளாஸ்மோடியா பல்சிபறம்‘ என்னும் வகையே மூளையைத் தாக்கும் தன்மை கொண்டது. மலேரியாவால் ஏற்படும் இறப்புகளில் 90 சதவீதம் பிளாஸ்மோடியா பல்சிபறம் ஏற்படுத்துபவைதான்.
இந்த உயிரி மனித ரத்தத்தில் கலந்தால் மட்டுமே மலேரியா காய்ச்சலை உருவாக்க முடியும். இந்தநோய் நேரடியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் நோயல்ல. எனவே, பிளாஸ்மோடியா ஓரணு உயிரிகள் நம் உடலில் சென்றால் மட்டுமே நோய் உண்டாகும். கொசுக்களில் 400 வகைகள் இருந்தாலும் 30 வகையான கொசுக்கள் மட்டுமே இந்த ஓரணு உயிரியை எடுத்துச் செல்லக் கூடியவை. பல நாடுகளில் குழந்தைகள் 5 வயது முடிவடைவதற்குள்ளாகவே இவை தாக்கி கொன்று விடுகின்றன.
இந்த கொசுக்கள் மோப்பம் பிடித்து ஒருவர் தோலை துளைத்து அதன் மறுபுறத்திலுள்ள ரத்தக் குழாயைத் துளைத்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. அப்படி அவை உறிஞ்சும் ரத்தம் உறைவதைத் தடுக்க ஒருவகை திரவத்தை தம் எச்சிலுடன் கலந்து உள் அனுப்பும். அந்த திரவத்தில் ஏற்கனவே வேறு ஒருவரின் உடலை துளைத்தபோது புகுந்த மலேரியா ஓரணு உயிரிகள் இருந்தால் புதியவரின் ரத்தத்துடன் கலந்து நோயை உருவாக்கி விடும். தொடக்கத்தில் கூறியதுபோல் மலேரியா குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.
ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள், ஆய்வாளர்கள். காலமாற்றத்தால் இந்த கொசுக்கள் குறைந்து, சிறிது காலம் கழித்து மீண்டும் வீரியமுடன் உயிர் பெற்று மிரட்டினால் என்ன ஆகுமோ என்பது தான் அவர்களது அச்சம். இப்போதுள்ள பயம் என்னவென்றால் திரும்ப மலேரியா பெருகினால், அது தற்போது கொஞ்சம் கூட நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத இன்றைய குழந்தைகளை பெருமளவு பாதிக்கும். ஒரு சுனாமி போல் வந்து மொத்த குழந்தைகளையும் கொன்று அழித்துவிடும் என்பதே ஆய்வாளர்களின் எதிர்கால கவலை.