சென்னை டி.ஜி.பி. அலுவலகம் மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆகியவற்றுக்கு நேற்று தனித்தனியாக வந்த இரண்டு மர்ம கடிதங்களில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை கொல்வோம் என்று எழுதியிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று வந்த கடிதத்தில் சிவப்பு மையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த விபரம் வருமாறு: “சென்னையில் 50 ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை அடையாளம் கண்டு வைத்துள்ளோம். அவர்களில் 10 பேரையாவது விரைவில் சுட்டுக்கொல்வோம். கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை போல சென்னையிலும் ஏப்ரல் 24 ஆம் தேதியன்று குண்டு வெடிக்கும்” என்று எழுதப்பட்டுள்ளது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த கடிதம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மிரட்டல் கடிதம் வந்த கவரில், ‘பத்திரிகையாளர் மன்றம் -சென்னை’ என்று ஆங்கிலத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
சென்னையில் வசிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் யாராவது இந்தக் கடிதத்தை எழுதி இருக்கலாம் என போலீசார் சந்தேகம் கொண்டுள்ளதாகவும், இந்த கடிதம் எழுதியவர்களை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு இந்து இயக்க பிரமுகர்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டபோதும் இது போன்ற மிரட்டல் கடிதங்கள் அடிக்கடி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் இந்து இயக்க தலைவர்களை குறித்து கொலை மிரட்டல் கடிதம் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.