100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் இன்று. ஒரே நாளில் 3 விசேஷங்கள்
இன்று ஒரே நாளில் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் குருபெயர்ச்சி என மூன்று முக்கிய விஷேசங்கள் நடைபெறுகிறது. 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசயமாக மூன்றும் ஒரே நாளில் இன்று அமைந்துள்ளதையொட்டி அனைத்து இந்து ஆலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும், ஆடி 18ஆம்பெருக்கு, ஆடிஅமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடி வெள்ளிக்கிழமைகள், சிறப்பு நாட்களாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதமான 18ம் நாளான இன்று ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை மற்றும் குரு பெயர்ச்சி ஆகியவை ஆகியவை சேர்ந்து நிகழ்வது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயமாகவே கருதப்படுகிறது. இந்த ஆடி மாதத்தில் வரும் 18ஆம் பெருக்கான இன்று, ஆற்றங்கரையில் உள்ள அம்மன் கோவில்களில், இளம்பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். திருமணமான பெண்கள், இன்றைய தினம் தாலிக் கயிற்றை மாற்றி அணிந்து கொள்வதும் பாரம்பரிய வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆடி அமாவாசையன்று, முன்னோர்களுக்கு, தர்ப்பனம் செய்து வழிபடுவதும் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் ஒரு வழக்கமாகும். சமுத்திரம், நதி போன்ற நீர்நிலைகளில் நமது முன்னோர்களுக்கு பிதுர்கடன் செய்து, அவர்களது ஆசியை பெறும் நாளாக, ஆடி அமாவாசை கருதப்படுகிறது.
அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர்வார். வியாழன் கிரகத்தின் அதிபதியான குரு பகவான் இன்று காலை 9:30 மணியளவில், குருபகவான் சூரியனின் ஆட்சி வீடான சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயருகிறார். இதையொட்டி குருபரிகார ஸ்தலங்களாக கருதப்படும் ஆலங்குடி உள்ளிட்ட ஸ்தலங்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.