மேலும் 3 நாள் காவல் நீட்டிப்பு: அதிர்ச்சியில் கார்த்திக் சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் 3 நாள் விசாரணைக்காவல் முடிந்து நான்காவது முறையாக இன்று பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சி.பி.ஐ அதிகாரிகள் காவல் நீட்டிப்பு வழங்க மனு தாக்கல் செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர், சி.பி.ஐ அதிகாரிகள் ஒவ்வொரு கேள்விக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக புகார் கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கார்த்தி சிதம்பரத்தை வரும் 12-ம் தேதி வரை விசாரணை செய்ய அதிகாரிகளுக்கு அனுமதி அளித்தார்.
இதற்கிடையே, கடந்த 6-ம் தேதி கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது 14-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றம் முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கார்த்தி சிதம்பரம் மற்றும் திகார் சிறையில் உள்ள அவரது ஆடிட்டர் பாஸ்கரராமனை ஒன்றாக வைத்து விசாரிக்க சி.பி.ஐ அனுமதி கோரியிருந்த நிலையில், நீதிபதி அதற்கு அனுமதி அளித்தார்.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் விசாரணைக்காவல் நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.