புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வலுக்கட்டாயமாகவெளியேற்றப்பட்ட பெண்களில் 3 பேர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பீகாரை சேர்ந்த அருணா, ராஜஸ்ரீ, நிவேதிதா, ஜெயஸ்ரீ, ஹேமலதா ஆகியோர் தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் 5 பேர்களும் தங்களுக்கு ஆசிரம நிர்வாகத்தினர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக காவல்துறையில் புகார் செய்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரம நிர்வாகிகள் 5 சகோதரிகளையும் அந்த குடியிருப்பில் இருந்து வெளியேற உத்தரவிட்டது. ஆனால் குடியிருப்பில் இருந்து அவர்கள் வெளியேற முடியாது என சகோதரிகள் மறுத்து வந்தனர்.. இது தொடர்பாக ஆசிரமம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் ஆசிரமத்திற்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து 5 சகோதரிகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 6 மாத கால அவகாசம் அளித்து குடியிருப்புகளை காலி செய்யும்படி உத்தரவிட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் முடிந்துவிட்டதால் சகோதரிகள் 5 பேர்களையும் ஆசிரம குடியிருப்பில் இருந்து காலி செய்ய காவல்துறை மூலம் ஆசிரம நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனால் கடும் மன வருத்தத்திற்கு உள்ளான 5 சகோதரிகளுள் ஒருவரான ஹேமலதா தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்தார். மற்ற சகோதரிகளும் காலி செய்ய மறுத்துவந்தனர்.
இதனால் கோர்ட் உத்தரவை மதித்து காலி செய்ய மறுத்ததாலும், தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஐந்து சகோதரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஹேமலதா, அருணா, ராஜஸ்ரீ, நிவேதிதா, ஜெயஸ்ரீ ஆகியோரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஹேமலதா மற்றும் அவரது சகோதரிகள் ஆசிரம குடியிருப்பை காலி செய்ய ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் விடுவித்தனர். இதையடுத்து நேற்று மாலையில் ஹேமலதா மற்றும் அவரது சகோதரிகள் அவர்களுக்கு சொந்தமான உடைமைகளை எடுத்துக்கொண்டு ஆசிரம குடியிருப்பில் இருந்து வெளியேறினர்.
இந்நிலையில், ஹேமலதா, அருணா, ராஜஸ்ரீ, நிவேதிதா, ஜெயஸ்ரீ உள்பட் 7 பேர் சின்னகாலான்பட்டு அருகே கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்றனர். இதில், அருணாஸ்ரீ, ராஜஸ்ரீ மற்றும் அவர்களது தாய் ஆகியோர் இறந்தனர். இவர்களின் உடல்கள் விழுப்புரம் அருகே தந்திராயன்குப்பம் கடற்கரையில் மீட்டப்பட்டன. 3 பெண்கள் மற்றும் தந்தை உயிருடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அரவிந்தர் ஆசிரமத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, ஆசிரமத்தின் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். இதில் கண்ணாடிகள் நொறுங்கியது. விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.