கங்கையில் ஒரு துறவி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது வெள்ளத்தில் தேள் ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்தது. நீரில் மூழ்கி உயிர் போய் விடுமே என்று வருந்திய துறவி அதைக் காப்பாற்ற முயன்றார்.
அதனைத் தன் கையில் தூக்கினார். கொடுக்கினால் அவரது கையைப் பதம் பார்த்தது தேள். வலி தாங்காமல் அலறியதோடு, தேளையும் ஆற்று வெள்ளத்திற்குள்ளேயே உதறி விட்டார். ஆனாலும், அவர் மனதில் இரக்க எண்ணம் மட்டும் அகலவில்லை. மீண்டும் தேளை கையில் எடுக்கும் முயற்சியில் இறங்கி தோற்றுப் போனார். மீண்டும் மீண்டும் அதே நிலை தொடர்ந்தது.
கடைசி முயற்சியாகத் துறவி வலியைப் பொறுத்துக் கொண்டு தேளினைக் கரையில் தூக்கிப் போட்டார். அது உயிர் பிழைத்து ஓடியது. அப்போது அங்கிருந்தவர்கள் அனைவரும், “”ஐயா! ஜீவ காருண்யம் துறவிக்குரிய நல்ல குணம் தான் என்றாலும், உங்களுக்கே ஆபத்தான விஷயத்தில் இறங்குவது நியாயம் தானா?”என்று கேட்டனர்.
“” தேளின் குணம் கொட்டுவது தானே! அற்ப ஜந்துவான தேளே தன் குணத்தில் பிடிவாதமாக இருக்கும்போது, உயிர்களை எல்லாம் நேசித்து வாழ வேண்டும் என்பதில் துறவியான நானும் பிடிவாதமாக இருப்பது தானே சரி” என்றார் அவர். கருணை குணம் நிறைந்த அந்த துறவியின் கை பட்டதால், தேளும் மறுபிறவியில் மனிதனாகப் பிறந்து ஞானத்தை அடைந்தது.