இந்த ஆண்டின் சிறந்த மனிதருக்கான ‘டைம்’ இதழின் போட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரண்டாவது இடத்தில் இருந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான டைம் இதழ் வருடந்தோறும் உலகின் சிறந்த மனிதரை தேர்வு செய்து அவர்கள் பரிசும் பாராட்டும் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் வாக்கெடுப்பு கடந்த சில நாட்களாக டைம் இதழின் அதிகாரபூர்வ இணையதளத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வாக்கெடுப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வரை 9.8 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார். அமெரிக்காவின் பெர்குசன் நகரில் கருப்பின இளைஞரை போலீஸார் சுட்டுக் கொன்றதை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த போராட்டக்காரர்கள் 10.8 சதவீத வாக்குகளுடன் முதலிடம் வகித்தனர்.
இந்தந் நிலையில், மோடி தற்போது முதலிடத்தை பெற்றுள்ளார். நேற்று வரை நடைபெற்ற வாக்கெடுப்பில் 12.8 சதவீத வாக்குகளை பெற்று பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்திலும், பெர்குசன் போராட்டக்காரர்கள் 10.1 சதவீத வாக்குகளுடன் 2-வது இடத்தில் உள்ளனர்.
அதே போல 3-ஆம் இடத்தில், ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்காக போராடும் ஜோஸ்வா வாங் உள்ளார். அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா 4-ஆம் இடத்திலும் உள்ளார்.
எபோலா நோய் எதிர்ப்புக்காக போராடி வரும் மருத்துவ குழு 5-வது இடத்தில் உள்ள நிலையில், அந்த இடத்தில் இருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 6-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வாக்குகளும் சரிந்து மிகவும் பின் தங்கிய நிலையாக வெறும் 2.3 சதவீத வாக்குகள் பெற்று 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.