திருச்சி ஸ்மார்ட் சிட்டிக்கு ஃபேஸ்புக் மூலம் ஆலோசனை. பொதுமக்கள் ஆர்வம்
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய திட்டங்களில் ஒன்று ஸ்மார்ட் சிட்டி திட்டம். 100 முக்கிய நகரங்களை தேர்வு செய்து ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களும் அடங்கும். இந்நிலையில் திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஜோன்ஸ் லாங் லாசெல்லே கன்சல்டன்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து திருச்சி மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. மேலும் இந்த திட்டம் செயல்படுத்தும் வகை குறித்து மக்களிடம் ஆலோசனை கேட்க, குறிப்பாக ஃபேஸ்புக் மூலம் ஆலோசனை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக திருச்சிராப்பள்ளி ஸ்மார்ட் சிட்டி (https://www.facebook.com/tiruchirappallismartcity) என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கு ஒன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி ஸ்மார்ட் சிட்டி (https://twitter.com/TrichySmartCity) என்ற பெயரில் டுவிட்டர் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சமூகவலைத்தளங்கள் மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். இதுதவிர https://mygov.in/group-issue/smart-city-tiruchirappalli/ என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கருத்துகளை பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி ஜோன்ஸ் லாங் லாசெல்லே கன்சல்டன்ட்ஸ் நிறுவன இணை இயக்குநர் சைமன் செல்வராஜ் அவர்கள் கூறியபோது, “சமூக வலைதளங்கள் மூலம் கருத்து கேட்கும் முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான நபர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து, அதற்கேற்ப கருத்துகளை தெரிவித்தால் நன்றாக இருக்கும். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கருத்து தெரிவிக்க மக்கள் முன்னுரிமை அளிக்கலாம்.
இளைஞர்களிடம் இருந்து அதிகளவில் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம்.
அனைவரிடமும் ஸ்மார்ட் செல்போன் உள்ளதால், நகரின் வளர்ச்சிக்காக ஒரே ஒரு நிமிடம் ஒதுக்கினால் போதும். அதிகபட்ச நபர்கள் பதிவு செய்யும் கருத்துகளுக்கு ஏற்ப திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.