ஒரே புத்தகத்தில் தமிழ், ஆங்கில, சீன மொழிகளில் திருக்குறள். ஜெயலலிதா அணிந்துரை

thirukural Chinese   Languageபழம்பெரும் தமிழ் நூல்களை உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பதை தமிழக அரசு கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வகையில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், பாரதியார், பாரதிதாசனின் கவிதைகள் மற்றும் பிரபல எழுத்தாளர்கள் எழுதிய தமிழ் நூல்களை ஆங்கிலம், சீனம், அரபி மொழிகள் மற்றும் உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான அறிவிப்பு 2011-12ஆம் ஆண்டு நடைபெற்ற  சட்டப்பேரவை கவர்னர் உரையில் வெளியிடப்பட்டது.

இதற்கான அரசாணை அப்பொழுதே பிறப்பிக்கப்பட்டு இவ்வகையான நூல்களை மொழிபெயர்ப்பு செய்யும் பணி தொடங்கப்பட்டது. சீன மொழியில் இதற்கான தகுதியுள்ள நபராக சீனக் கவிஞர் யூஷி தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்த திருக்குறளை ஆதாரமாகக் கொண்டு யூஷி அதை சீன மொழியில் மொழியாக்கம் செய்தார்.

தற்போது அந்த சீன திருக்குறள் புத்தகம் அச்சிடப்பட்டு, வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் அணிந்துரை பெறப்பட்டதும் அது வெளியாகும் என கூறப்படுகிறது.. இந்த புத்தகத்தில் தமிழ், ஆங்கிலம், சீன மொழிகளில் திருக்குறள் அமைந்துள்ளது என்பது இதன் சிறப்பு.

இதேபோல் சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களையும் ஆங்கிலத்தில் இருந்து யூஷி சீன மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார். அதுவும் வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது.

திருக்குறள் மற்றும் பாரதியார் பாடல்களை அரபி மொழியில் மொழியாக்கம் செய்யும் பணியில் சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மலேசியாவில் உள்ள பல்கலைக்கழக பேராசிரியர் நியமிக்கப்பட்டனர். தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நூல்களும் வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளன.

திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்காக தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு முதற்கட்டமாக ரூ.41.70 லட்சம் ஒப்பளிக்கப்பட்டது. இதை அச்சிட்டு வெளியிடும் பணியை தமிழ் வளர்ச்சி இயக்ககம் மேற்கொண்டுள்ளது.

இதுபோல பாரதிதாசனின் பாடல்களும் இந்த மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளது. வரும் ஆண்டில் இதுவும் வெளியிடப்பட்டு, தமிழ் மொழியின் பெருமை உலகுக்கு காட்டப்படும்.

Leave a Reply