திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 5–வது நாளான நேற்று இரவு தங்க கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கருட உற்சவம் கோலாகலம்:
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 5–வது நாளான நேற்று கருட சேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. கருட உற்சவத்தை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். கோவிலின் நான்குமாட வீதிகளில் அமைக்கப்பட்டு இருந்த கேலரிகளில் பக்தர்கள் மாலை 4 மணியளவில் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு திருமலை–திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவசமாக உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.
மாலை ஊஞ்சல் சேவை முடிந்ததும், உற்சவர் மலையப்பசாமி வாகன மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு சகஸ்ர மாலை, மகர கண்டி, லட்சுமி ஆரம், மேல்சாத்து வஸ்திரம், தங்கத்தில் வைர கற்கள் பதிக்கப்பட்ட சங்கு, சக்கரம் மற்றும் ஆண்டாள் சூடி கொடுத்த மலர் மாலைகள், கிளிகள் ஆகியவற்றால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக தங்க, வைர நகைகள் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
பக்தர்கள் சாமி தரிசனம்
அதன்பிறகு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்தியான மலையப்பசாமி இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணிவரை நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அப்போது நான்குமாட வீதிகளில் அமைக்கப்பட்டு இருந்த கேலரிகளில் அமர்ந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்களும், கோவில் எதிரே கூடியிருந்த திரளான பக்தர்களும் ‘‘ஏடுகுண்டல வாடா வெங்கட்ரமணா கோவிந்தா… கோவிந்தா… அனாத ரட்சக ஆபத்பாந்தவ கோவிந்தா… கோவிந்தா… ஏழுமலைவாசா ஏகஸ்வ ரூபா கோவிந்தா… கோவிந்தா… என விண் அதிரும் அளவுக்கு பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
திடீர் மழை
முன்னதாக மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை திருமலையில் திடீரென மழை பெய்தது. இதனால் மாடவீதிகளில் கேலரிகள் அமர்ந்திருந்த பக்தர்கள், கைக்குழந்தைகளுடன் அமர்ந்திருந்த பெண் பக்தர்கள், வயது முதிர்ந்தோர் உள்பட அனைவரும் கொட்டும் மழையில் நனைந்தனர். அந்த பக்தர்களில் சிலர் குடை பிடித்துக்கொண்டும், பெண்கள் சேலை முந்தானையை தலையில் போட்டுக்கொண்டும் நின்றனர்.