கடந்த புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி நாட்களை முன்னிட்டு திருமலை ஏழுமலையான் கோவிலின் உண்டியல் வருமானம் வியாழக்கிழமை ஒரே நாள் மட்டும் ரூ.3.22 கோடி வசூலானதாக பரக்காமணி அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். சமீபத்தில் ஒரே நாளில் வசூலான அதிக தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வந்தனர். இதனால் ஏழுமலையான் உண்டியல் வருமானமும் அதிகமாக வசூலானது. உண்டியலில் பணம் போட புத்தாண்டு தினத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மட்டுமே ரூ.10 லட்சம் உண்டியலில் போட்டதாக கூறப்படுகிறது.
புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியன்று பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் நேற்று ஒரே நாளில் உண்டியல் வருமானம் ரூ.3.22 கோடி வசூலானது என்பது தெரிய வந்தது.. இது நிகழாண்டின் மிகப்பெரிய வருமானம் என்று பரக்காமணி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், வைகுண்ட ஏகாதசி அன்று 75 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்ததாகவும் அவர்கள் கூறினர்.