ஷேர்களை காணிக்கையாக செலுத்த ஏழுமலையான் பெயரில் புதிய டிமேட் கணக்கு
திருப்பதி ஏழுமலையானுக்கு தினந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ரொக்கம், நகை உள்பட பல்வேறு வகையான காணிக்கைகளை பொதுமக்கள் செலுத்தி வருகின்றனர். ஒருசிலர் தங்கள் நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட ஷேர்களையும் ஏழுமலையானுக்கு காணிக்கைகளாக செலுத்துகின்றனர். இந்த ஷேர்களை ஏழுமலையான் பெயருக்கு மாற்றுவதில் சிரமம் இருந்ததால் தற்போது அதற்கென ஒரு தனிக்கணக்கு ஏழுமலையான் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக் ஹோல்டிங் கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் (எஸ்எச்சிஐஎல்) மூலம் ஏழுமலையான் பெயரில் (எண்:1601010000384828) புதிய டிமேட் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த டிமேட் கணக்கின் மூலம் ஷேர்களை காணிக்கையாக எளிதில் மாற்றலாம். இதுவரை 1.8 லட்சம் ஷேர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே திருப்பதி ஏழுமலையான் பெயரில் 950 வங்கிக்கணக்குகள் உள்ளது. கோவில் உண்டியலில் வரும் காணிக்கைகள் இந்த வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதுவரை ரூ.6,200 கோடி ஃபிக்ஸ்ட் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக இந்த ஆண்டு ரூ.744.91 கோடி வட்டி கிடைத்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் உண்டியலில் தங்க நகைகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்து கின்றனர். ஆண்டுக்கு சுமார் ஒரு டன் தங்க நகைகள் காணிக்கையாக செலுத்தப்படுகின்றன. இவற்றை மும்பையில் உள்ள மிண்ட்டுக்கு அனுப்பி பிஸ்கெட்டுகளாக மாற்றி அதை தேசிய வங்கிகளில் டெபாசிட் செய்கின்றனர். இவ்வாறு டெபாசிட் செய்யப்படும் தங்கத்துக்கு ஆண்டுதோறும் 1 சதவீதம் தங்கம் கூடுதலாக வழங்கப்படுகிறது. இவை மீண்டும் டெபாசிட் செய்யப்படுகிறது.