திருப்பதி கோவிலில் மாயமான ரூ.500 கோடி மதிப்பு நகைகள்: பொதுநல மனு தாக்கல் செய்யும் சுப்பிரமணியசுவாமி
திருப்பதி கோவிலுக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள நகைகள் மாயமானதாக திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தலைமை குருக்கள் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட ரமண தீட்சிதர் அவர்கள் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ள நிலையில் இதுகுறித்து பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்யவிருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் யமுனாவை சுத்தப்படுத்தும் திட்டம் ஆகியவற்றில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் தயாராக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் பொதுநல மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே ராஜ பரம்பரையினர் சுவாமிக்கு வழங்கிய 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணவில்லை. சி.பி.ஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். ஆகம விதிகளை திருப்பதி தேவஸ்தானம் மீறுகிறது என ரமண் தீட்சித தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது