ரமணா பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை செய்த திருப்பூர் மருத்துவமனை. பெரும் பரபரப்பு.

deadbodyஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த நடித்த ரமணா திரைப்படத்தில் மரணமடைந்த ஒருவருக்கு சிகிச்சை செய்வது போல நடித்து லட்சக்கணக்கில் ஒரு பெரிய மருத்துவமனை மோசடி செய்வது போன்ற காட்சி ஒன்று வரும். இதேபோல் உண்மையிலேயே திருப்பூர் மருத்துவமனையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது அந்த பகுதியை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

திருப்பூரை சேர்ந்த அஜீத்குமார் என்பவர் நேற்று சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். படுகாயமடைந்த அஜீத்குமாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அஜீத்குமார் மருத்துவமனையில் சேர்ந்த சில நிமிடங்களிலே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், மருத்துவமனை நிர்வாகமோ, அஜீத்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்றும் அவருடைய உறவினர்களிடம் கூறியுள்ளது. பெற்றோர்களும் தங்கள் மகனின் உயிரை காப்பாற்ற பெரும் முயற்சி செய்து மருத்துவமனை கேட்ட பணத்தை கட்டியுள்ளனர்.  அதன்பின்னர் சிலமணி நேரங்கள் கழித்து திடீரென அஜீத்குமார் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதோடு, உடனடியாக அஜீத்குமார் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்துவிட்டதாம்.

இதனால் சந்தேகம் அடைந்த அஜீத்குமாரின் பெற்றோர், காவல்துறையில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வாலிபர் அஜீத்குமார் உயிர் இழந்ததை மறைத்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்தது போல மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனையின் நிறுவனர் மலர்மன்னன் அதிரடியாக காவல்துறையினர்களால் கைது செய்யப்பட்டார்.

ரமணா படப் பாணியில், தனியார் மருத்துவமனை ஒன்று பணத்தை வாங்கிக் கொண்டு இறந்தவருக்கு சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply