திருவண்ணாமலை ஸ்பாட் ரேட் நிலவரம்!

திருவண்ணாமலை ஸ்பாட் ரேட் நிலவரம்!
tiruvannamalai
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை! சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாய் விளங்குவது இந்த ஊர். அண்ணாமலையாரின் தீப தரிசனத்தைக் காண்பதற்காகவே பல லட்சம் பக்தர்கள்  ஆண்டுதோறும் இங்கு வந்து செல்கின்றனர். மிகவும் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கிரிவலத்துக்காக வெளிநாட்டினரும் இங்கு வந்து செல்வது மட்டுமன்றி, இங்கேயே குடியேறவும் தொடங்கியுள்ளனர்.

வெளியூரில் வேலை பார்க்கும் பலரும் ஓய்வுக் காலத்தை அமைதியாகவும் ஆன்மிக வழியிலும் கழிக்க விரும்புகிறார்கள். அவர்களின் முக்கியத் தேர்வாக இருக்கிறது  திருவண்ணாமலை. அண்ணாமலையாரின் கோயில் மட்டுமல்லாது, ரமணாஸ்ரமம், கந்தாஸ்ரமம், செஞ்சி கோட்டை, சாத்தனூர் போன்ற சுற்றுலா இடங்கள் அருகில் இருப்பதும் மக்கள் இங்கு வந்து குடியேற முக்கிய காரணம். சுற்றுலா இடங்களுக்குக் குறைவில்லாமல் இருப்பதால், போக்குவரத்து வசதியும் இங்கு நிறைவாகவே இருக்கிறது.

ஊரின் முக்கியப் பகுதியாக அண்ணாமலையாரின் கோயில் இருப்பதால் வருடத்தில் பாதி நாட்கள் சுற்றுவட்டாரம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. 15 நாட்கள் வரை நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பௌர்ணமி கொண்டாட்டம், ஒவ்வொரு மாதம் பௌர்ணமி விசேஷம் என எப்போதும் களைகட்டுகிறது ஊர். புண்ணிய ஸ்தலமாய் விளங்கும் இந்த ஊரில் சொந்த வீட்டில் குடியிருக்க பலரும் ஆர்வத்துடன் மனை வாங்குகிறார்கள்.

இந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துக்கொள்ள தேனருவி ரியல் எஸ்டேட் உரிமையாளர் கமலக்கண்ணனை சந்தித்துப் பேசினோம்.

“இப்போது திருவண்ணாமலை மட்டுமல்ல, எல்லா ஊரிலுமே ரியல் எஸ்டேட் விற்பனை குறைஞ்சிருக்கு. அதுக்கு காரணம், அரசு வழிகாட்டி மதிப்பு ஏற்றம்தான்.

ஆனாலும் இங்கே இன்னும் கூட பலர் விரும்பி நிலம் வாங்குறாங்க. வீடு கட்டுவதற்கு மட்டுமல்லாமல் தொழில்முறை காரணங்களுக்காகவும் வாங்குறாங்க. அதிகமாக கோயிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் தொழில் முறைக்காகத்தான் வாங்குவாங்க. அதனால் அந்தப் பகுதிகளில் விலை அதிகமாகவே இருக்கு.

இப்போதுள்ள நிலைமையில் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலி நிலம் எதுவும் இல்லை. மற்றபடி திருவண்ணாமலையைச் சுற்றி உள்ள பகுதிகளில் வாங்குவதற்கு ஏற்ப மனை விலை சற்று குறைவாகவே உள்ளது. அதனால் தண்டராம்பட்டு, அவலூர் பேட்டை, வேங்கிக்கால், வேட்டவலம் ரோடு, மெய்யூர், மேலத்திக்கான் போன்ற இடங்களில் மனை விற்பனை அதிகரித்துள்ளது” என்று கூறினார்.

விஜயா ரியல் எஸ்டேட் உரிமை யாளரான வஜ்ஜிரவேலுவிடம் கேட்டோம்.

“இப்போது திருவண்ணாமலையில் மனை வாங்கு பவர்களில் பலரும் ஏற்கெனவே இங்கே நிலம் வைத்திருக்கிறார்கள். பலர் தங்களுடைய எதிர்காலத் தேவைக்காகதான் இங்கே இடம் வாங்குகிறார்கள். வெளியூரில் இருந்து ஆன்மிகம் நாடி வருகிறவர்கள், அவர்களின் ஓய்வுக்காலத்தைப் புண்ணிய ஸ்தலத்தில் கழிக்க ஆசைப்பட்டும் இங்க நிலம் வாங்கி வீடு கட்டுகிறார்கள்.

மேலும், இங்கே வருகிறவர்கள் திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள முக்கியப் பகுதிகளில்தான் மனை வாங்க ஆசைபடுகிறார்கள். அதனால் திருவண்ணாமலையை சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் ரியல் எஸ்டேட் பிசினஸ் இல்லை.

மேலும், இது சுற்றுலா ஸ்தலமாக இருப்பதால், போக்குவரத்து பிரச்னையே இல்லை. அதனால் மக்கள் விரும்பி மனை வாங்குகிறார்கள்.

இப்போது புறநகராக இருக்கும் பகுதிகளில் விலை குறைவாக உள்ளது. அரசுடையான்பட்டு போன்ற இடங்களில் ஒரு சதுர அடி 100 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரைக்கும் விற்பனை ஆகிறது. இது மாதிரி நிறையக் கிராமங்கள் திருவண்ணாமலையை ஒட்டி இருக்கு. இங்கே பள்ளி, கல்லூரி போன்ற வசதிகள் வரும் என எதிர்பார்க்கிறோம். அப்படி வந்தால் அந்த இடத்தின் விலை யும் கண்டிப்பாக அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கு” என்றார்.

திருவண்ணாமலை பகுதியில் மனை வாங்கிக் குடியேறியுள்ள சுகுமார் நாயுடுவிடம் பேசினோம்.  “இந்த ஊர்ல கால் பட்டாலே புண்ணியம் என்றுதான் பலபேர் இங்க வீடு வாங்கி குடி வர்றாங்க. வாழ்வாதாரத்துக்கு ஏற்ற ஊராக இது இருப்பது ஒரு காரணம். மற்ற ஊரில் வாழ ஒரு மாதத்துக்கு தோராயமாக 15,000 ரூபாய் வேண்டுமென்றால், இங்கு வாழ 11,000 போதுமானது.

பெங்களூரு, வேலூர், சென்னை, திருப்பதி போன்ற முக்கிய இடங்களுக்கு சில மணி நேரங்களில் செல்லும் வகை யிலும் இருக்கிறது. நிலம் வாங்கிக் குடியேறுவதற்கு ஏற்ற வகையில் விலையும் குறைவாக இருக்கு” என்று கூறினார்.

விவசாயமும் இங்கு நல்ல முறையில் இருப்பதால், விவசாயம் செய்ய விரும்பியும் இங்கு பலர் குடியேறுகின்றனர். பல தலைமுறைகளாக இங்கு விவசாயம் செய்பவர்கள் இன்றும் தொடர்ந்து வருவதால், விளைச்சல் குறையவில்லை. அதனால் இங்கிருந்து வெளியூர் சென்றவர்கள்கூட திரும்பி வரும் வாய்ப்புகள் அதிகம்.

தொழிற்சாலைகள் இங்கு அதிகம் இல்லை. எனவே, எதிர் காலத்தில் தொழிற்சாலைகள் வந்தால் நிச்சயம் இங்கு மனை விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர் இந்த ஊர் மக்கள். மக்களின் வசதிக்காக விழா காலங்களில் ஏற்படும் போக்குவரத்து பிரச்னையைத் தவிர்க்க புதிய பேருந்து நிலையம் வரும் என்று கூறுகிறார்கள். எனவே, குறைந்த விலையில் இப்போதே  இந்த ஆன்மிக நகரில் மனை வாங்கினால், லாபத்துடன் புண்ணியத்தையும் சேர்த்து பெறலாம்!

Leave a Reply