சட்டமன்ற தேர்தலில் பாமகவுடன் கூட்டணி இல்லை. 170 தொகுதிகளில் போட்டி. திமுக அதிரடி அறிவிப்பு

dmk2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று சமீபத்தில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கருத்துக்கணிப்பு எடுத்து வெளியிட்டதை அடுத்து தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் ஆயத்தமாகி வருகின்றன. மேலும் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுகவின் செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக, விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்றும்  சட்டமன்றத் தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

” தமிழ்நாட்டில் மக்கள் பிரச்னைக்காக நாங்கள் இடதுசாரிகள், காங்கிரஸ், தேமுதிக, மதிமுக போன்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். ஆனால் கூட்டணி சம்பந்தமாக எந்தக்  கட்சியுடனும் பேச்சு நடத்தவில்லை. வரும் 2016 சட்டமன்றத்  தேர்தலில். திமுக  170 தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ளது.

கூட்டணிக் கட்சிகளுக்கு மீதியுள்ள இடங்களைத்தான் ஒதுக்க முடியும். கடந்த 2011 தேர்தலில் தி.மு.க. 119 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டதால், கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது. அதே சமயம் எங்களது ஓட்டுக்கள் குறையவில்லை. குறைந்த அளவு தொகுதியில் போட்டியிட்டதே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. அந்தத் தவறை மீண்டும் செய்ய மாட்டோம்.

பிரதான எதிர்க்கட்சியாக திகழும் திமுக,  கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகளுக்காக ஒரு போதும் விட்டுக் கொடுக்காது.காங்கிரசை பொறுத்தவரை அந்த கட்சி, முன்னாள் மத்திய அமைச்சர்  ஜி.கே.வாசனை இழந்து விட்டது. அவர் காங்கிரசில் இருந்து வெளியேறி, தனிக்கட்சி தொடங்கி இருக்கிறார். எனவே காங்கிரஸ் எங்களிடம் இருந்து 30 தொகுதிகளுக்கு மேல் எதிர்பார்க்க முடியாது.

பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள்  சாதி ரீதியாக அரசியல் நடத்துகின்றன. எனவே அந்தக்  கட்சிகளுடன் கூட்டணி சேர எந்த திராவிட கட்சியும் விரும்பாது. சில கட்சிகளும், கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி பற்றி பிரசாரம் செய்து வருகின்றன. தமிழக மக்கள் ஒரு போதும் கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டார்கள். தனிப்பெரும் கட்சியின் அரசுதான் இது வரை தமிழ்நாட்டில் நடந்து வந்து இருக்கிறது.

கடந்த முறை 2013 மேல் சபை தேர்தலின் போது தேமுதிக ஆதரவை கேட்டோம். தேமுதிக இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீசை சந்தித்து, கனிமொழிக்கு ஆதரவாக தேமுதிக எம்.எல்.ஏ.க்கள்  வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் ஆதரவு அளிக்க மறுத்துவிட்டனர்.

எனவே இந்த முறை கூட்டணிக்காக எந்த கட்சியையும் நாடிச் செல்லவில்லை. இடது சாரி கட்சிகளை மட்டும் அணுகுவோம். இயற்கையாக அவர்களுடன் எங்களுக்கு இணக்கமான நட்பு உள்ளது. காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, கட்சிகளுடன் இணைந்து பணியாற்றினாலும் மற்ற விஷயங்கள் பற்றி எதுவும் பேசவில்லை.

பாமக வன்னியர்களை நம்பி இருக்கிறது. 25 ஆண்டுகளாக வன்னியர் அல்லாதவர்களை தாக்கி அரசியல் நடத்தி வருகிறது. அவர்கள் வன்னியர் என்ற நிலையை விட்டு வரமாட்டார்கள். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மற்ற சமூகத்தினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்”

இவ்வாறு டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

Leave a Reply