தேர்தல் அறிவிப்பு வெளிவந்த 24 மணிநேரத்திற்குள் வேட்பாளர் பட்டியலை அறிவித்த மம்தா பானர்ஜி
தமிழகம் உள்பட ஐந்து மாநில தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இன்னும் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தே ஒரு இறுதிமுடிவு எடுக்காத நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது மட்டுமின்றி மொத்தமுள்ள 294 தொகுகளுக்கும் வேட்பாளர் பட்டியலையும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்றும் தனித்தே போட்டியிட உள்ளதாகவும் தைரியமான முடிவை எடுத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்துக்கு வரும் ஏப்ரல் 4-ம் தேதி முதல் மே 5-ம் தேதி வரை 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று அதிரடியாக செய்தியாளர்களை சந்தித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, ‘வரும் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
கேரளாவில் எதிரும்புதிருமாக இருக்கும் காங்கிரஸ் மற்றும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மேற்குவங்கத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதுகுறித்து கருத்து கூறிய மம்தா பானர்ஜி, “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேற்கு வங்கத்தில் கைகோர்த்துள்ளன. கேரளத்திலும் அவர்கள் ஏன் அவ்வாறு கூட்டணி அமைத்து ஆட்சி புரியக் கூடாது? அப்படி செய்தால் தேர்தல் ஆணையத்துக்கு பண விரயம் இருக்காது. அந்த இரு கட்சிகளும் இணைந்து பொருத்தமற்ற ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளன. மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்” என்று கூறினார்.
மேலும் கடந்த தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சி சார்பில் 31 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும் தற்போது, 45 பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறிய முதல்வர் மம்தா, சிறுபான்மை சமூகத்தைச் சேந்த 57 பேருக்கு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Chennai Today News: TMC to fight alone, Mamata Banerjee first to announce candidates