காங்கிரஸ், திமுக, தேமுதிக ஆகிய கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக தேமுதிகவுடன் கூட்டணி வைக்க திமுக காய் நகர்த்தி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது விஜயகாந்த் முன்னிலையிலேயே திமுகவின் முன்னணி தலைவர் எஸ்ரா சற்குணம் கூட்டணி குறித்து பேசினர்.
அதன்பின்னர் அடுத்தகட்டமாக தேமுதிகவுடன் நேற்று திருமாவளவன் கூட்டணி குறித்து பேசியுள்ளதால் இந்த கூட்டணி இறுதிகட்டத்திற்கு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 8 இடங்களும், காங்கிரஸுக்கு 5 இடங்களும், திருமாவளவன் கட்சிக்கு 1 இடமும், மனித வள மக்கள கட்சிக்கு 1 இடமும், புதிய தமிழகத்திற்கு 1 இடமும், மீதமுள்ள 24 இடங்களில் திமுகவும் நிற்கும் என கூறப்படுகிறது.
காங்கிரஸ் 5 தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் காங்கிரஸை கூட்டணியில் இருந்து கழட்டி விட்டுவிட்டு தேமுதிகவிற்கு மேலும் இரண்டு தொகுதிகள் கொடுக்க திமுக முடிவு செய்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதால தமிழக அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.