சென்னை ஐகோர்ட்டுக்கு மத்திய பாதுகாப்பு படை உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்
சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வக்கீல்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும் நீதிபதிகளின் அறைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தை உள்ளூர் போலீஸார் தடுக்க தவறியதாகவும், இதனால் நீதிமன்றத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை ஐகோர்ட்டுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டனர்.
மேலும் மத்திய படை பாதுகாப்புக்கான செலவு தொகை ரூ.16 கோடியே 60 லட்சத்தை 7 நாட்களுக்குள் தமிழக அரசு செலுத்த வேண்டும் என்றும் அதன் பின்னர் 7 நாட்களுக்குள் மத்திய தொழில் பாதுகாப்பு படையை (சி.ஐ.எஸ்.எப்.) ஐகோர்ட்டு பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்றும் வருகிற 16ஆம்தேதி இங்கு மத்திய படை வீரர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் வக்கீல் பாலாஜி இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
காவல் பணி என்பது மாநில அரசு தொடர்புடையது. உடமைகளை பரிசோதிக்கவும், அடையாள அட்டை வைத்துள்ளனரா? என்பதை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ளும் போதும் உள்ளூர் மொழி தெரியாததால் பிரச்சினை அதிகரித்து மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ஐகோர்ட்டுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. மத்திய படை பாதுகாப்பு எந்த வகையில் இருந்தாலும் அது சரியாக இருக்காது. எனவே சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.