முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்
தமிழக சட்டப்பேரவை நேற்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. நேற்று மாலை சிறப்பு சட்டமன்றம் கூடி ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்திற்கு மாற்றாக சட்ட முன்வடிவை கொண்டு வந்தது. இதன்பின்னர் இன்று இரண்டாவது நாளாக கூடிய சட்டமன்றத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானத்தை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதலிடத்திற்கு கொண்டுவர பாடுபட்டவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்றும், அவர் பூவுலகத்தில் இருந்து மறைந்தாலும், இதயத்தில் இருந்து தமிழகத்தை வழிநடத்தி செல்வதாக முதல்வர் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா, சோ. ராமசாமி பாலமுரளிகிருஷ்ணா, நரசிம்மன், நவநீதகிருஷ்ண பாண்டியன், கண்ணையன், கோ.சி. மணி, பாலுச்சாமி, பாராமலை ஆகியோர்களுக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன