வேலைவெட்டி இல்லாதவர்களுக்காக திமுக நடத்தும் போராட்டம்தான் இந்த பந்த். பொன்.ராதாகிருஷ்ணன்
விவசாயிகளுக்காக இன்று எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் முழுஅடைப்பு வெற்றிகரமாக நடந்து வருகிறது., தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.ஒருசில பேருந்துகள் மட்டுமே ஓடி வருகின்றன. அதிலும் கூட்டம் அதிகம் இல்லை. பொதுமக்கள் இன்று வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த முழு அடைப்பு போராட்டம் குறித்து தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது, ‘வேலை இல்லாதவர்களால், வேலைவெட்டி இல்லாதவர்களுக்காக பந்த் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நமக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக, கேரள மாநிலங்கள் அணை கட்டுவதற்கு நமது ஆறுகளான காவேரி, தாமிரபரணி, வைகையில் இருந்து மணல் அனுப்பும் பணியைச் செய்தவர்கள் தி.மு.க-வினர். அவர்கள் இன்று, விவசாயிகளுக்காகப் போராடுகிறோம் என நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.
விவசாயிகளுக்காகப் போராட, தி.மு.க-வுக்கு எந்த அருகதையும் கிடையாது. அவர்கள் பிழைப்புக்காகவும் தமிழகத்தில் செல்வாக்கை இழந்துவரும் தி.மு.க-வைப் பிழைக்கவைக்கவுமே போராட்டம் அறிவித்துள்ளனர். பிழைப்புக்காகப் போராடும் தி.மு.க-வின் தந்திரத்துக்கு சில அமைப்புகளும் இரையாகி உள்ளன. 41 நாட்களாக டெல்லியில் போராடிய அய்யாக்கண்ணு போன்றவர்களைப் பல முறை சந்தித்து போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தேன். அதை ஏற்காத அவர், தி.மு.க சொன்னதும் போராட்டத்தைக் கைவிட்டு டெல்லியில் இருந்து கிளம்பிவிட்டார்.
உண்மையில், மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த அனுப்பியவர்கள், திரும்பி வருமாறு அழைத்தவுடன் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டுக் கிளம்பிவிட்டார் அய்யாக்கண்ணு. தி.மு.க-வும் அய்யாக்கண்ணும் ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக்கொள்ளும் போராட்ட ஆதரவு கேவலமானது. இத்தகைய போராட்டங்கள் மூலம் தமிழக விவசாயிகளின் பிரச்னை தீரப்போவதில்லை. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு தமிழத்தில் அமைந்த பின்னரே, விவசாயிகளின் வேதனை தீரும். அது விரைவில் நடக்கும்’‘ என்று கூறினார்.