தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு நாளை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மதம்26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9-ம் தேதி வரை நடந்தது. 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மே மாதம் மே 23-ம் தேதி வெளியானது. தேர்வு முடிவு வெளியான அன்றைய தினமே தனித்தேர்வர்களுக்கு மட்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பள்ளியில் படித்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி,10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவரவர் படித்த பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் நாளை காலை 10 மணி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புக்காக பதிவு செய்ய விரும்பும் மாணவர்களின் வசதிக்காக, மாணவர்கள் அவரவர் படித்த பள்ளிகளிலே ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மதிப்பெண் சான்றிதழ் வாங்க வரும் மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிட முகவரிக்காக ரேஷன் அட்டை கொண்டுவருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.