கவர்னருடன் முதல்வர் அவசர சந்திப்பு: தூத்துகுடி பிரச்சனை குறித்து ஆலோசனையா?
தூத்துகுடியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நேற்றிரவு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சந்தித்தார்
இந்த சந்திப்பின்போது துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். தூத்துகுடி சம்பவம் குறித்து கவர்னருடன் முதல்வர் ஆலோசனை செய்ததாகவும், அங்கு இயல்பு நிலை திரும்ப எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நெல்லை, தூத்துகுடி மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வரும் ஐந்து நாட்களுக்கு இணையம் முடக்கப்பட்டிருப்பதாகவும், கலவரக்காரர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் பரப்பும் வதந்தியை தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் தமிழக அரசு கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.