ஜெயலலிதா பாணியில் குட்டிக் கதை சொன்ன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொரு மேடையிலும் ஒரு குட்டிக்கதையை சொல்லும் வழக்கத்தை உடையவர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நடைபெற்ற நலத்திட்ட விழாவில் ஒரு குட்டிக்கதையை கூறினார். அவர் கூறிய கதை இதுதான்:
ஒரு இளைஞர் குருவிடம் பயிற்சி பெறச் சென்றான். சென்ற முதல் நாளே குரு அந்த இளைஞரிடம் ‘பயிற்சி என்பது நான் சொல்லித் தெரிவதை விட, நீ அனுபவத்தில் புரிந்து கொள்வது மிகவும் நல்லது’ என்றார். அந்த இளைஞரும் குருவைப் பார்த்து, ‘உங்களைப் பார்த்து விரைவில் கற்றுக் கொள்வேன் குருவே’ என்றார். உடனே, குருவைப் பின்பற்ற ஆரம்பித்த அந்த இளைஞர் குருவின் செயல்கள் அனைத்தையும் அப்படியே பின்பற்ற ஆரம்பித்தார். அத்துடன் அதை குருவிடமும் தெரிவித்தார். அதற்கு அந்த குரு, ‘என்னை அப்படியே பின்பற்றினால் அது மிகவும் தவறு. இதை விரைவிலேயே நீ தெரிந்து கொள்வாய்’ என்றார்.
அப்படி ஒரு நாள் தியானம் செய்த குரு, ஆற்றில் இறங்கி தண்ணீரில் நடந்தபடியே மறு கரையை அடைந்தார். அதைப் பார்த்த அந்த இளைஞர், தியானம் செய்தால் நாமும் தண்ணீரில் நடக்கலாம் என்று நினைத்து தியானம் செய்துவிட்டு தண்ணீரில் நடக்க ஆரம்பித்தார். ஆனால், ஆற்றில் கால் வைத்த அடுத்த விநாடியே தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டான். உடனே, ‘என்னைக் காப்பாற்றுங்கள் குருவே’ என அலறினான். அந்த இளைஞரைக் காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்த குரு, ‘ஆற்றில் கால் வைத்து நடக்க எந்தெந்த தடங்களில் கற்களைப் புதைத்து வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். கண்மூடித்தனமாக என்னை பின்பற்றக்கூடாது. எப்போதும் சிந்தித்து செயல்பட வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்”
இதுதான் முதல்வர் சொன்ன குட்டிக்கதை. இதன் மூலம் யாரையும் பின்பற்றாமல் சொந்த வழியில் செல்ல வேண்டும் என்பதே முதல்வரின் கருத்து