தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை. கோவை பிஎஸ்ஜி கல்லூரி முதலிடம்.
இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்னும் ஒருசில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு வசதியாக தேர்ச்சி விகிதங்களின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, கோவையில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பம் மற்றும் அப்ளைடு ரிசர்ச் நிறுவனம், 97.32 சதவீத தேர்ச்சி விகிதத்தை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. 94.45 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் நாமக்கல் கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி 2-ம் இடத்தையும், 93.48 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வு நிறுவனம் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.
இதேபோல் விழுப்புரம் வேதாந்த தொழில்நுட்பக் கல்லூரி கடைசி இடத்தை பெற்றுள்ளது. இங்கு தேர்வெழுதிய 214 பேரில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 2.89 சதவீதமாகும். இதற்கு அடுத்ததாக கோவை விஷ்ணு லட்சுமி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் 60 பேர் தேர்வெழுதி 3 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 5 சதவீதமாகும். கன்னியாகுமரி நாராயணகுரு சித்தார்த்தா பொறியியல் கல்லூரியில் தேர்வெழுதிய 64 பேரில் 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 7.81 சதவீதமாகும்.
மேலும் 522 பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதங்களை முழு அளவில் தெரிந்து கொள்ள http://aucoe.annauniv.edu/pdf/ap/PASS_PERCENTAGE_UG_REGULAR_STUDENTS_AM15_WITH_TNEACODE.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.