முல்லைப் பெரியாறு அணையின் மதகு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த கேரள எம்.எல்.ஏ., தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளரை அவமானப்படுத்திய்தோடு அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் தமிழக கேரள எல்லையில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவிவின் பீர்மேடு தொகுதி எம்.எல்.ஏ. பிஜிமோள் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி முல்லைப் பெரியாறு அணைக்கு இன்று சென்றுள்ளார். அவருடன் 30 பேர் உடன் சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
முல்லைப்பெரியாறு பகுதிக்குள் அத்துமீறி அணை பகுதியில் நுழைந்த எம்.எல்.ஏ வேகமாக மதகு பகுதிக்கு சென்றிருக்கின்றனர். மேலும், அங்குள்ள சில இடங்களை இடித்து சேதப்படுத்தியதாகவும் தெரிகிறது.
இந்த சமயத்தில் அங்கு வந்த தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாதவன், கேரள எம்.எல்.ஏவை தடுத்து அங்கு செல்லக்கூடாது எனவும், சில இடங்களை இடித்ததையும் தட்டிக்கேட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த பிஜிமோள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாதவனை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாதவன், அணை பாதுகாப்பு காவல்துறை இன்ஸ்பெக்டர் பாபுவிடம் முறையிட்டுள்ளார். அதற்கு, இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் ‘இது எங்கள் வேலை அல்ல’ எனக் கூறியுள்ளனர்.
தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தாக்கப்பட்டதோடு, அவமரியாதை செய்யப்பட்ட சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது