தமிழகத்தின் ஆட்சி ஹாஸ்பிட்டலில் ஐசியு வார்டில் படுத்திருக்கிறது. மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. இந்நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய பயணத்தை திருவாரூர் மாவட்டம் உள்ளிக்கோட்டை என்ற கிராமத்திலிருந்து துவங்கினார். இந்த கிராமம் டி.ஆர்.பாலுவின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மன்னார்குடி அருகே கிராமத்தில் கரும்பு விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது, எங்களை தேடி வந்து குறைகளை கேட்பவர்தான் எங்களுக்கு முதலமைச்சாரக வரவேண்டும் என்று விவசாயிகள் கூற, ஸ்டாலின் நெகிழ்ச்சியில் திளைத்தார்.
அங்கிருந்து கிளம்பிய ஸ்டாலின் மன்னார்குடி சந்தோஷ் மஹாலில் நடைபெற்ற கட்டட கட்டுமான தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், ”நமக்கு நாமே திட்டத்தின் நீண்ட நெடிய பயணத்தை நான துவங்கியிருக்கிறேன். முதல் கட்டமாக 13 நாட்கள் பயணம் செய்துவிட்டேன். இரண்டாவது கட்டமாக கொங்கு மண்டலத்தை முடித்துவிட்டு, அதைத்தொடர்ந்து தஞ்சையை முடித்துவிட்டு உங்கள் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் என்னுடைய பயணத்தை முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு தலைவர் கருணாநிதி அறிவுரை சொல்லி, ஆலோசனை தந்தார். மேலும், நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார். இந்த ஆட்சியை நம்பி, முதலமைச்சரை நம்பி, ஆட்சியாளர்களை நம்பி இல்லாமல், நமக்கு நாமே பயணம் சிறப்போடு நடைபெறுகிறது. ஒருசில இடங்களில, நடந்து, சைக்கிள், மோட்டார் சைக்கிள், ஜீப்பில் உட்கார்ந்து சந்தித்து பேசி வருகிறேன்.
காலை 8 மணி தொடங்கினால் 4 மணிக்கும், மாலை தொடங்கினால் இரவு 12 மணிக்கு முடிக்கிறேன். அதன்படி நேற்று வரை 125 தொகுதிகளில் பயணம் செய்து முடித்துவிட்டேன். இன்று நம்முடைய மாவட்டத்தில் 4 தொகுதி முடித்தால் 129 தொகுதி முடிந்துவிடும். ஆக பாதி கிணறு தாண்டியாச்சு, மீதி கிணற்றை உங்கள் ஆதரவோடு அன்போடு முடித்துவிடுவேன்.
இந்த பயணத்தில் விவசாயிகள், பொதுமக்கள், மருத்துவர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என ஒவ்வொரு நாளும் எல்லா தரப்பு மக்களையும் சந்தித்து இருக்கிறேன். எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மிகமிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏனென்றால், ஒவ்வொரு நிர்வாகமும் சீர்கெட்டு இருக்கிறது. இப்போ ஒரு ஆட்சி நடக்குதுன்னு சொல்லக்கூடாது, உட்கார்ந்துக்கிட்டு இருக்கு. அப்படிக்கூட சொல்ல முடியாது படுத்து இருக்கு, அது எங்க படுத்திருக்குதுன்னு சொன்னா ஹாஸ்பிட்டலில் ஐசியு வார்டில் படுத்திருக்கிறது. ஐசியு வார்டில் படுத்திருந்தால் எப்படியாவது காப்பாற்றி கொண்டுவந்துவிடலாம், அதைவிட மோசமாக கோமா நிலையில் படுத்திருக்கு, அதனால் யாராலும் காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கிறது.
ஆக, இப்போது தமிழகத்திற்கு மாற்றம் தேவைப்படுகிறது. ஆட்சியில் இருக்கும் ஆட்சியர், எம்.பி., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆய்வுக்கு வரணும், ஆய்வு செய்ய வேண்டிய முதலமைச்சர் கொடநாட்டில் போய் ஒய்வு எடுக்கிறார். அவர் மக்களை பற்றியோ, மக்களை தேவைகளை பற்றியோ சிந்திப்பதில்லை. கோட்டைக்குக்கூட 10 நாளுக்கு ஒருமுறைதான் வருகிறார். சட்டமன்றத்திற்கு வந்தால் அரை மணிநேரம் 110ன் கீழ் பயன்படுத்தி அறிவித்து விட்டு போய் விடுகிறார். இந்த நிலையே இருந்தால் நிர்வாகம் எப்படி சிறப்பாக இருக்கும். அதுக்குத்தான் இந்த நமக்கு நாமே திட்டம்.
ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் மக்களை சந்தித்துக்கிட்டு இருக்கிறோம். அதாவது ஆளும்கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் தி.மு.க.தான் செயல்பட்டுக்கிட்டு இருக்கு. கட்டட தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல தி.மு.க ஆட்சியில்தான் 16 நல வாரியம் அமைக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் தொழிலாளர்கள் அட்டையில் இருந்த தலைவர் கருணாநிதியின் படத்தை எடுத்துவிட்டு, உழைப்பாளர்களின் சிலையை வைத்தார். ஆனால், இந்த ஆட்சியில் அதை எடுத்துவிட்டு அம்மா படத்தை வைத்திருக்கிறார்கள். அம்மா படத்தை போட்டவர்கள் கவனிக்கணும், கவனிக்காமல் கொடநாட்டில் ஓய்வு பெறுகிறார். அம்மாவை விளம்பரபடுத்தி அம்மா மருத்தகம், அம்மா தண்ணீர், அம்மா உணவகம் என்ற இந்த திட்டங்களெல்லாம் மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்பதை நீங்களெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்”
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.