செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதின் உண்மை நிலை என்ன? தமிழக அரசு விளக்கம்

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதின் உண்மை நிலை என்ன? தமிழக அரசு விளக்கம்
semparapakkam
சென்னையில் கடந்த 1ஆம் தேதி பெய்த கனமழை மற்றும் செம்பரப்பாக்கம் ஏரியின் உபரி நீர் திறந்துவிட்டதான் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சிகளும், ஒருசில ஊடகங்களும் செம்பரப்பாக்கம் ஏரி முன் அறிவிப்பு இன்றி திறந்துவிட்டதாகவும், வானிலை அறிக்கையை கணக்கில் கொண்டு முன்கூட்டியே செம்பரப்பாக்கம் ஏரியின் இருப்பு நீரை குறைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வாறு குறைத்திருந்தால் இந்த வெள்ள பாதிப்பை தடுத்திருக்கலாம் என்றும் கூறி வருகின்றன. இந்நிலையில் செம்பரப்பாக்கம் ஏரி திறந்துவிட்டது குறித்து தமிழக அரசு இன்று விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கு.ஞானதேசிகன் விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் பின்வருமாறு:

அண்மையில் ஒரு சில ஊடகங்களில் சென்னையில் குறிப்பாக அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு காரணம் சரியான முறையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெள்ள உபரி நீரை வெளியேற்றுவதில் நீர் மேலாண்மை செய்யாதது தான் என்று செய்திகள் வந்துள்ளன. இதுகுறித்து உண்மை நிலவரத்தை விளக்க வேண்டியது முக்கியமானதாகும்.

சென்னை வடிநிலத்தின் 5 உப வடிநிலங்களான, அதாவது ஆரணியாறு, கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு மற்றும் கோவளம் ஆகியவற்றில் அடையாறு உப வடிநிலமும் அடங்கும். சென்னை வடிநிலத்தின் நிலப்பரப்பானது பெரும்பாலும் சமதள பூமியையும், அநேக வெள்ளம் தாங்கிப் பகுதிகளையும், கழுவெளிகளையும் கொண்டதாக அமைந்துள்ளது.

அடையாறு ஆறானது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதனூர் ஏரியின் உபரிநீர் கலுங்கல்களில் இருந்து தொடங்கி, மொத்தமாக 42 கி.மீ. தூரம் ஓடுகிறது. இதன் 18 கி.மீ. தொலைவில் உள்ள திருநீர்மலை அருகமை வரை செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீருடன் கலக்கிறது. பின்னர் அங்கிருந்து 12 கி.மீ. பயணித்து சென்னை மாநகரத்தின் எல்லைப்பகுதியில் உள்ள நந்தம்பாக்கம் அருகில் நுழைந்தவுடன் சென்னை மாநகரப் பகுதிகளான ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் மற்றும் அடையாறு வழியாக 12 கி.மீ. ஓடி, இறுதியாக சீனிவாசபுரத்திற்கும், பெசன்ட் நகருக்கும் இடையே வங்காள விரிகுடாவில் கடலில் கலக்கிறது.

அடையாறு ஆற்றின் மொத்த நீர்வரத்துப் பகுதி 808 சதுர கி.மீ. இந்த நீர் வரத்துப்பகுதியில் மொத்தம் 198 ஏரிகள் உள்ளன. சென்னை மாநகரத்திற்கு தென்மேற்கில், காஞ்சீபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி, சென்னை மாநகர குடிநீர் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடையாறு ஆற்றின் நீர்வரத்துப் பகுதியான 808 சதுர.கி.மீ. ஆனது, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்துப் பகுதியான 358 சதுர.கி.மீ. பரப்பையும் உள்ளடக்கியதாகும். செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி (3.645 டி.எம்.சி அடி) ஆனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் கொள்ளளவில் 33 சதவீதமாகும். இதன் முழு நீர் மேல் மட்டம் 24 அடி ஆகும். இதன் அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றும் திறன் வினாடிக்கு 33,060 கன அடி ஆகும்.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 1–11–2015 அன்று, 5.8 அடியாகவும், அதன் கொள்ளளவு 228 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. சென்னைப் பகுதிகளில் இந்த நவம்பர் மாதம் பெய்த மழையளவான 1,018 மி.மீ ஆனது 1918–ம் ஆண்டிற்கு பின்னர் பெய்த மிக அதிகபட்ச மழை அளவாகும். இதன் காரணமாக அடையாறு ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளும் அவைகளின் முழு கொள்ளளவை அடைந்து, உபரி நீர் அடையாறு ஆற்றிற்கு வந்து கொண்டிருந்தது.

நவம்பர் மாதம் பெய்த கன மழையின் காரணமாக நவம்பர் மாத மத்தியில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிக அளவு நீர் வரத்து இருந்தது. 17–11–2015 அன்று ஏரியில் நீர்மட்டம் 22.3 அடியாக இருந்த நிலையில் வெள்ள நீரினை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளின்படி எதிர்வரும் பருவமழையினால் பெறக்கூடிய நீர் வரத்தினை கருத்தில்கொண்டு 18 ஆயிரம் கன அடி வீதம் நீர்வெளியேற்றப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 30–11–2015 அன்று, 22.05 அடியாகவும், நீர்வரத்து 750 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 800 கன அடியாகவும் இருந்தது.

வெள்ள நீரை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான விதிகளின்படி, பருவமழை காலம் தொடர்ந்து இருக்கும் வரையில், நீர்த்தேக்கங்களில் முழு நீர் மட்டத்தை விட 2 அடி குறைவான அளவில் நீர் தேக்கி வைக்கப்பட வேண்டும். வெள்ள நீரை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான விதிகள் தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் நீர் இருப்பை கருத்தில் கொள்ளுதல், கீழ்ப்பகுதிகளில் ஏற்படும் வெள்ளத்தினை கட்டுப்படுத்துதல் மற்றும் நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பினை கருத்தில் கொள்ளுதல் ஆகியவற்றை சமநிலை செய்துகொள்வதற்காக வகுக்கப்பட்டதாகும்.

30–11–2015 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை குறித்து பின்வருமாறு அறிவுறுத்தியது:–

‘‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் விட்டு விட்டு கனமழையோ அல்லது கன மழையோ பெய்யலாம். உட்பகுதியில் விட்டுவிட்டு கனமழை பெய்யலாம்.’’ வானிலை மையத்தின் சொற்றொடர்படி ‘ஐசலோட்டட்’ என்றால் ஒன்று அல்லது 2 இடங்கள் என்றே பொருள்படும், கனமழை என்பது 6.4 செ.மீ இருந்து 12.4 செமீ வரையாகும். மிக கனமழை என்பது 12.4 செ.மீ.–ல் இருந்து 24.4 செ.மீ. வரை ஆகும்.

கனமழை அதிகம் இருந்த டிசம்பர் 1–ந்தேதியன்று, செம்பரம்பாக்கம் ஏரியில் அதன் முழு நீர்மட்ட அளவான 24 அடியில், காலை 6 மணிக்கு 22 அடி நீர் இருந்தது. நீர்மட்டத்தின் முழுமையான அளவைக் காட்டிலும் 2 அடிக்கு குறைவாக உள்ள நிலையிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது வழக்கம். இந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த 1–ந்தேதி காலை 6 மணிக்கு ஏரியின் நீர்மட்டம் 22 அடியாக இருந்தபோது, ஏரியில் இருந்து 900 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டது.

ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்றவாறும், நீர்வரத்துக்கு ஏற்றவாறும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதிகபட்சமாக அன்று நள்ளிரவு 12 மணி அளவில் 29 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு, கடந்த 2–ந்தேதி மாலை 6 மணி அளவில் அதிகபட்சமாக 15 ஆயிரம் கனஅடி மட்டுமே வெளியேற்றப்பட்டதாக நீர்வள ஆதாரத்துறையின் சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது குறித்து, பொதுப்பணித்துறையினரிடம் இருந்து தகவல் கிடைத்தவுடன், காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, அடையாறு ஆற்றோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறுவதில் உண்மையில்லை.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட விவரங்கள் குறித்து ஒவ்வொரு கட்டத்திலும் செய்தித்துறை சார்ந்த நிறுவனங்கள் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும், உடனுக்குடன் அரசுத் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

பெருமழை பெய்த, கடந்த 1–ந்தேதியன்று, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது தொடர்பாக சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது. கனமழை எச்சரிக்கை வெளியான உடனேயே, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அணையின் பாதுகாப்பு கருதி நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் ஆகியன, உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டன.

ஏரியின் பாதுகாப்புக்காக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரை திறந்து விடுவது குறித்து பொதுப்பணித்துறை முதன்மைச்செயலாளர், தலைமைச்செயலாளர் ஆகியோரிடம் இருந்து, குறிப்பிட்ட எவ்வித உத்தரவோ அல்லது அறிவுறுத்தலோ பெறப்பட தேவையில்லை. அப்போதைய நிலைமைக்கேற்ப, அந்தப் பகுதியில் கண்காணிப்பில் இருந்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அவ்வப்போது குறிப்பிட்ட அளவுக்கு உபரிநீரை வெளியேற்றினார்கள்.

உபரிநீர் வெளியேற்றம் குறித்து, உரிய விதிமுறைப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் கட்டுப்பாட்டு அதிகாரியான பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், சென்னை, காஞ்சீபுரம் கலெக்டர்களுக்கும், சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கும், மாநகராட்சிக்கும் அதுகுறித்து தகவல் தெரிவித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

டிசம்பர் 1–ந்தேதி காலை 11.20 மணிக்கு ஏரியில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதாக சென்னை மாவட்ட கலெக்டர், முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து அன்று பிற்பகல் 1.32 மணிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுவதாக 2–வது வெள்ள எச்சரிக்கை விடுத்தார். இந்த வெள்ள அபாய எச்சரிக்கைகள் தொலைக்காட்சிகள், வானொலி மூலம் விடுக்கப்பட்டன. அனைத்து மாலை நாளிதழ்களிலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டதாக செய்தி வெளியானது.

காவல், தீயணைப்பு, வருவாய் துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் வீதி வீதியாகச் சென்று ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, கோட்டூர்புரம், ராமாபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாக அப்புறப்படுத்தனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 300 பேர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், தமிழக அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

டிசம்பர் 1–ந்தேதி காலை, முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கனமழை குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டார். நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு மூத்த அமைச்சர்களுக்கு முதல்–அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply