தமிழக கவர்னர் இன்று திடீரென தமிழகம் வருவது ஏன்? ஆட்சியில் மாற்றமா?
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு தினகரன் அணியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று திடீரென தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகம் வரவுள்ளார். தினகரன் அணிக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் முதல்வர் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து கவர்னர் அதிரடி உத்தரவு பிறப்பிக்க தமிழகம் வருகிறாரா? என்ற கேள்வி அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆனால் நாளை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழகம் வர உள்ளதால், அவரை வரவேற்பதற்காக ஆளுநர் வரவுள்ளதாகவும், வேறு அரசியல் காரணங்கள் எதுவும் அவரது வருகையில் இல்லை என்றும் இன்னொரு தரப்பு செய்தி தெரிவிக்கின்றது.