மருத்துவ நுழைவுத்தேர்வை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு
மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வு கட்டாயம் என்றும் நுழைவுத்தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு தமிழக மாணவர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளதை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவ நுழைவு தேர்வு முதல் கட்டமாக மே 1ஆம் தேதியும் இரண்டாவது கட்டமாக ஜூலை 24ஆம் தேதியும் நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு இட்டுள்ளது. இரண்டாவது கட்ட நுழைவுத்தேர்வு நடத்த போதுமான கால அவகாசம் இருப்பதால் இந்த ஆண்டே நுழைவுத்தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என்றுகோரி சுப்ரீம் கோர்ட்டில்பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் இந்த ஆண்டு தேர்வினை நடத்துவதற்கான உத்தேச தேதியை சமர்பிக்குமாறு உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய மருத்துவ கவுன்சில் உத்தேச தேதியினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் வரும் மே 1ம் தேதி முதல் கட்டமாகவும், ஜூலை 24 ஆம் தேதி இரண்டாவது கட்டமாகவும் தேர்வுகள் நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
மருத்துவ நுழைவு தேர்வு நடத்த கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழக அரசின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.