ஒவ்வொரு வீட்டிற்கும் இண்டர்நெட். தமிழக அரசின் திட்டத்திற்கு மாபெரும் வரவேற்பு
இண்டர்நெட் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இண்டர்நெட்டுக்காக அதிக கட்டணங்கள் வசூலிப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுகின்றனர். இந்த பிரச்சனையை தீர்க்க தமிழக அரசே குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவியுடன் இணைந்து ‘இல்லந்தோறும் இணையம்’ என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிவேக இண்டர்நெட் கனெக்சன் கொடுக்கப்படும்
இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: “இல்லந்தோறும் இணையம்” என்ற கொள்கையின் அடிப்படையில், அதிவேக அகண்ட இண்டர்நெட் சேவைகளை மாவட்ட தலைநகரங்களில் ஏற்கனவே தமிழக அரசு வழங்கி வருகிறது. குறைந்த கட்டணம் -சிறப்பான சேவையின் காரணமாக இந்தத் திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து இரண்டாம் கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து, அதிவேக அகண்ட அலைவரிசை இண்டர்நெட் சேவைகளை வருவாய் பங்கீட்டு முறையில் வழங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விருப்பம் கோரும் விண்ணப்பத்தை நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tactv.in) இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 15, மாலை 3 மணி.
விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும். தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் தொழில் தொடங்க ஏதுவாக, தேசிய வங்கியிலிருந்து கடன் பெறவும் உதவி செய்யப்படும் அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.