ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் வக்கீல்களுக்கு தடை. புதிய சட்டதிருத்தத்தால் பெரும் பரபரப்பு
தமிழகத்தில் அவ்வப்போது நடைபெறு வக்கில்களின் போராட்டங்கள் சிலசமயம் நீதிபதியையே விமர்சனம் செய்யும் அளவுக்கு எல்லை மீறுவதாக கூறப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வக்கீல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வகையில் சில சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு அவை தமிழக அரசின் அரசிதழ்களிலும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட் பதிவாளர் டி.ரவீந்திரன் அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
வழக்குரைஞர்கள் சட்டப் பிரிவு 34(1) வழங்கியுள்ள அதிகாரத்தின் படி, அந்தச் சட்டத்தில் கீழ்காணும் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.
வழக்குரைஞர்கள் நீதிபதியின் பெயர், அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி பணம் பெற்றாலோ; நீதிமன்ற உத்தரவு, ஆவணங்கள் போன்றவற்றை அனுமதி இல்லாமல் மாற்றினாலோ, நீதிபதி, நீதித்துறை அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் பேசினாலோ; கடும் சொல் கொண்டு பயமுறுத்தினாலோ; நீதிபதிகள் குறித்து பொய்யான, ஆதாரமற்ற, அவதூறான குற்றச்சாட்டுகள், புகார் மனுக்களை மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்பினாலோ; நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் ஊர்வலம், போராட்டத்தில் ஈடுபட்டாலோ; நீதிபதி அறை முற்றுகை, கோஷங்கள் அடங்கிய அட்டையை தாங்கி நின்றாலோ; நீதிமன்றத்துக்குள் மது அருந்திவிட்டு நுழைந்தாலோ; அவர்கள், உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் நிரந்தரமாகவோ அல்லது நீதிமன்றம் முடிவு செய்யும் குறிப்பிட்ட காலத்துக்கோ பணிபுரிய தடை விதிக்க நீதிமன்றமே நடவடிக்கை மேற்கொள்ளலாம். இந்தத் தகவலை தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு நீதிமன்ற பதிவாளர் அறிக்கையாக அளிக்க வேண்டும்.
14-ஏ-இன் கீழ் பட்டியலிடப்பட்ட ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் வழக்குரைஞர்கள் உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் பணிபுரிய தடை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு உண்டு.
இதே போன்ற அதிகாரம் சார்பு நீதிமன்றங்களுக்கும் பொருந்தும். இருப்பினும், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் வழக்குரைஞர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான விவரங்களை மாவட்ட முதன்மை நீதிபதிக்கு சார்பு நீதிமன்றங்கள் அறிக்கையாக அளிக்க வேண்டும்.
உயர்நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிபதி வழக்குரைஞர்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக உத்தரவு ஏதேனும் பிறப்பிக்கும் முன்னர், அவரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி, அவரது விளக்கத்தையும் கேட்க வேண்டும். விளக்கம் கேட்க வேண்டும்.
வழக்குரைஞர் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும் போது, உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் பணிபுரிய இடைக்கால தடை விதிக்கும் அதிகாரமும் உயர்நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிபதிக்கு வழங்கப்படுகிறது
இவ்வாறு அந்த அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.