அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல். தயாராகும் அரசியல் கட்சிகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, வரும் அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் அதற்குள் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்பட 12 மாநகராட்சிகளும், 125 நகராட்சிகளும், 529 பேரூராட்சிகளும், 12,524 ஊராட்சிகளும் உள்ளன. இவற்றில் மேயர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள் வார்டு கவுன்சிலர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் என மொத்தம் 1,32,458 பதவிகள் உள்ளன.
சட்டமன்ற தேர்தலை போலவே உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக தனித்தே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திமுக கூட்டணியில் சில மாற்றங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மக்கள் நலக்கூட்டணி உள்ளாட்சி தேர்தலை எப்படி சந்திப்பது என்பது தெரியாமல் சிக்கலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.