அதிநவீன போர்க்கப்பலில் ஆலோசனை செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்
ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் அதிமுக அம்மா அணியின் 122 எம்எல்ஏ-க்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பரபரப்பான அரசியல் சூழ்நிலை இருந்து வருகிறது. தமிழக அமைச்சர்களின் இரவு நேர ரகசிய கூட்டம், அதிமுகவின் இரு அணிகளும் இணைவது, தினகரன் கைதாக வாய்ப்பு, போன்ற பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக அம்மா அணியை சேர்ந்த 122 எம்.எல்.ஏக்களும் சென்னை வந்துள்ளனர்.
இந்த 122 எம்.எல்.ஏக்களும் இன்று சென்னை வந்துள்ள ஐஎன்எஸ் போர்க்கப்பலை பார்வையிடவே வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ள இந்த கப்பலில் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், நிலோபர் கபில் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உள்பட சசிகலா அணியை சேர்ந்த எம்எல்ஏ-க்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்த பயணத்தின் போது, அதிமுக இரு அணிகள் இணைப்பு, இரு அணிகளிலும் நிலவும் சூழ்நிலை என்பன உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர்கள் விவாதிக்கவுள்ளதாக தெரிகிறது.
அதிநவீன வசதிகள் கொண்ட ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் கடந்த 15-ம் தேதி சென்னை துறைமுகத்திற்கு வந்தது. ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் கொச்சி, ஐஎன்எஸ் மைசூர் என்ற பெயரில் மூன்று போர் கப்பல்கள் ஏற்கனவே உள்ள நிலையில், ஐஎன்எஸ் சென்னை என்ற அதிநவீன போர்க்கப்பல் கடந்த ஆண்டு இந்திய கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சென்னை துறைமுகத்துக்கு தற்போது வந்துள்ள இந்த கப்பல், நவீன தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.