நுங்கம்பாக்கம் கொலை. சுவாதியில் செல்போனில் துப்பு கிடைத்ததா?
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நேற்று இன்ஃபோசிஸ் பெண் ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதியின் தொலைபேசிக்கு வந்த 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் குறித்து மாநகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவாதியின் படுகொலை தொடர்பாக குற்றவாளி என சந்தேகப்படும் நபரின் வீடியோவை நேற்று வெளியிட்ட காவல்துறையினர் அந்த வீடியோவில் இருப்பவர் குறித்து தெரிய வந்தால் உடனடியாக காவல்துறையினர்களிடம் தகவல் கொடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில் சுவாதியின் தொலைபேசிக்கு வந்த 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் குறித்து விசாரணை செய்யப்படுகிறது. அந்த நம்பர்களுக்கு போலீஸார் தொலைபேசியில் அழைத்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட சுவாதி, வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்ததாக தகவல் கிடைத்துள்ளதால் இதுகுறித்து சுவாதியின் நண்பர்களிடமும், வாடகை கார் ஓட்டுநர் ஒருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சென்னை புறநகர் ரயில்நிலையங்களில் எல்லா நேரங்கலிலும் போலீஸ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீஸ் பாதுகாப்பு பணியில் இருந்திருந்தால் பெண் பொறியாளர் கொலையை தடுத்திருக்கலாம் என்றும் ரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சுவாதி படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நடைமேடையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.