இந்தியாவின் சிறந்த கால்நடை பல்கலைக்கழகம் எது தெரியுமா?

இந்தியாவின் சிறந்த கால்நடை பல்கலைக்கழகம் எது தெரியுமா?
veterinary
தமிழக பல்கலைக்கழகங்களில் கல்வியின் தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கல்வியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவக்ரள் கூறி வரும் நிலையில் அதை நிரூபிப்பதுபோல் தற்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,  இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழங்களில் முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும் இந்த பல்கலைக்கழகம் தேசிய தரவரிசையில் 36வது இடத்தையும், மாநில அளவில் 3வது இடத்தையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் பல்கலைக்கழங்களுக்கான தேசிய தரவரிசை ஆய்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த ஆய்வில் கல்வி, கல்வி கற்றலுக்கான சூழல்கள், ஆராய்ச்சி, ஆலோசனை, கூட்டிணைவு மேம்பாட்டு முயற்சிகள், தேர்ச்சி, வேலைவாய்ப்புக்கான சூழ்நிலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 2,734 கல்வி நிறுவனங்கள் பங்குபெற்றன. இந்த ஆய்வின் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டன.

இந்த ஆய்வின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கான மதிப்பீட்டில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,  தேசிய அளவில் 36-வது இடத்தையும், மாநில அளவில் 3-வது இடத்தையும் பெற்றுள்ளது.

முதல் 50 பல்கலைக்கழக பட்டியலில் இடம்பிடித்து பெருமை சேர்த்துள்ளது. இதுமட்டுமின்றி கல்வி மற்றும் கல்வி கற்றலுக்கான சூழல்களை வழங்கிடும் கோட்பாட்டில் தேசிய அளவில் 5-வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது.

தேசிய வேளாண் ஆராய்ச்சி பணிகளை உள்ளடக்கிய 63 மாநில அளவிலான வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வள பல்கலைக்கழங்களில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 2-ம் இடத்தையும் பெற்றுள்ளது.

இந்தியாவில் சிறப்பாக உள்ள 12 கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழங்களில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் முதல் இடத்தை பெற்றுள்ளது. பல்கலைக்கழக வரலாற்றில் இது ஒரு மைல்கல்” என்று கூறினார்.
 

Leave a Reply