டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சென்னை பாரி முனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தேர்வாணையத் தலைவர் நவநீதி கிருஷ்ணன் இந்தத் தகவலை வெளியிட்டார்.
தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான போது 5,566 பணியிடங்கள் மட்டுமே இருந்ததாகவும், பின்னர் கூடுதல் பணியிடங்கள் உருவானதால் 5 ஆயிரத்து 855 பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என அவர் கூறினார்.
ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியல், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல், சிறப்பு பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் எனத் தனித்தனியாக தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் மார்ச் 24ம் தேதி தொடங்கும் எனவும் அவர் கூறினார்.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், நிலஅளவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, கடந்தாண்டு ஆகஸ்ட் 25ம் தேதி தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை 12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.