தாது மணல் கொள்ளையைத் தடுக்க கொள்கை முடிவு – முதல்வர்

பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட முதல் துணை நிதிநிலை அறிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கனிமத் தாது மணல் குறித்து தேமுதிக எம்.எல்.ஏ. அழகாபுரம் ஆர். மோகன் ராஜ் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில்:

தாது மணல் எடுக்கப்படுவது தொடர்பாக சில புகார்கள் எழுந்ததால் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் தாது மணல் எடுப்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளோம்.

அந்த விசாரணைக் குழு அரசுக்கு அறிக்கை அளித்த பிறகு மேல்நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தாது மணல், கனிமங்கள் அடங்கிய பெருங்கனிமக் குத்தகைப் பகுதி 50 ஹெக்டேர் வரை இருந்தால், மாநில சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து சான்று பெற்றால் போதும். 50 ஹெக்டேருக்கு மேல் இருந்தால் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை சான்று பெற வேண்டும்.

கார்னெட் மற்றும் சிலிமனைட் ஆகிய கனிமங்களுக்கான சுரங்கத் திட்ட ஒப்புதலை அளிக்கும் அதிகாரம் மத்திய அரசின் இந்தியச் சுரங்கக் கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏனைய கனிமங்களான ரூட்டைல், இல்மனைட், சிர்கான் போன்ற கனிமங்களுக்கான சுரங்கத் திட்ட ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் மத்திய அரசின் அணுசக்திக் கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிர்ணயித்தவாறு கார்னெட் கனிமத்துக்கு ராயல்டி தொகையாக இந்தியக் கனிம குழுமம் மாதந்தோறும் வெளியிடும் விற்பனை மதிப்பில் 3 சதவீதம் என்ற கணக்கில் வசூலிக்கப்படுகிறது.

இல்மனைட், ரூட்டைல் போன்ற கனிமங்களுக்கு விற்பனை விலையில் 2 சதவீதம் ராயல்டி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நேர்வுகளில் மத்திய அரசு மட்டுமே ராயல்டி தொகையை நிர்ணயம் செய்ய முடியும்.

சிறப்புக் குழுவின் விசாரணை: தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமத் தாது மணல் எடுப்பதற்காக வழங்கப்பட்ட குத்தகை இடங்களில் முறைகேடாக அவை எடுக்கப்பட்டுள்ளது எனவும், அது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

இதன்படி, வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது ஆய்வறிக்கையை என்னிடம் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, திருச்சி, கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள 71 தாது மணல், கனிம குத்தகைகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளை ஆய்வு செய்து ஒருமித்த ஆய்வறிக்கையை வழங்கவும், அதுவரை அந்த மாவட்டங்களில் தாது மணல் குவாரிகளின் செயல்பாடுகளை நிறுத்திவைக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இதற்காக வருவாய்த் துறை செயலாளரின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு தனது தணிக்கையை திருநெல்வேலியில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முறைகேடுகள் குறித்து அனைத்து குவாரிகளையும், ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வருவாய்த் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் பெருங்கனிமக் குவாரிகள் குறித்து ஒரு கொள்கை முடிவு தமிழக அரசால் எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

Leave a Reply