இன்று அப்துல்கலாமின் இறுதிச்சசங்கு. பிரதமர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
முன்னாள் குடியரசு தலைவரும், இந்திய இளைஞர்களின் ஹீரோவுமாகிய அப்துல்கலாம் அவர்கள் உடல் இன்று அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது இறுதி சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல்காந்தி உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். அப்துல்கலாமின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்கு வசதியாக மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பொதுவிடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளும் இன்று ஒருநாள் மூடப்படுகின்றது.
ராமேசுவரத்தில் உள்ள அப்துல்கலாமின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவருடைய உடல் ராமேசுவரத்தில் பேருந்து நிலையம் அருகே மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராமேசுவரத்தில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ராமேசுவரத்தில், அவரது உடலுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், மனோகர் பரிக்கர், பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் வடிவேலு, விவேக் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.