மத்திய அமைச்சர் உமாபாரதியுடன் அதிமுக எம்பிக்கள் இன்று சந்திப்பு
காவிரி பிரச்சனையில் இதுவரை நடுநிலை வகித்து வந்த மத்திய அரசு நேற்று திடீரென கர்நாடக அரசுக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் இதுகுறித்து இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை மக்களைவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் இன்று சந்தித்து ஆலோசனை செய்யவுள்ளனர்.
முன்னதாக, பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக எம்பிக்கள் நேரம் கேட்டிருந்ததாகவும், ஆனால் திடீரென தங்கள் திட்டத்தை மாற்றி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியைச் சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் இந்த சந்திப்பின் போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அதிமுக எம்பிக்கள் வலியுறுத்த உள்ளதாகவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கர்நாடகாவிடமிருந்து தமிழகத்துக்கு உரிய நீரைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசை அதிமுக எம்பிக்கள் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.