தமிழகத்தில் இன்று போகிப் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
பொங்கல் தினத்திற்கு முதல்நாள் கொண்டாடப்படும் பண்டிகை போகிப்பண்டிகை. அதாவது மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படும் பண்டிகை இது. தமிழகம் உள்பட உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
தமிழகத்தில், தமிழர் மட்டுமல்லாமல் பிற மொழி பேசுபவர்களும் போகி பண்டிகையை கொண்டாடினர். இதற்காக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே எழுந்த சிறுவர்கள், பெற்றோருடன் வீட்டில் இருந்த பழைய பாய் உள்ளிட்ட பொருட்களை வீதியில் போட்டு எரித்தனர். அப்போது, சிறுவர்கள் மேளம் அடித்தும் மகிழ்ந்தனர்.
சென்னையில் நிலவி வரும் கடும் பனி மூட்டத்துடன் போகி பண்டிகையின் புகை மூட்டமும் சேர்ந்ததால் சாலையில் எதிரே வருபவர்கள் தெரியாமல் வாகன் ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதேபோல், போகி புகை மூட்டம் மற்றும் கடும் பனியால் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 16 உள்நாட்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். மேலும், மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு வந்த ஓமன் ஏர்வேஸ் விமானம் பெங்களூருவிற்கு திருப்பி விடப்பட்டது.