கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்களுக்கு தமிழக ஆளுநர், அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து புதன்கிழமை அவர்கள் வெளியிட்ட செய்தி:
ஆளுநர் கே.ரோசய்யா: மகிழ்ச்சியான இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை, அன்பு, இரக்கம் ஆகிய நற்பண்புகளைப் போதித்தவர் இயேசு கிறிஸ்து.
இந்த நாளில் அனைவரிடமும் ஒற்றுமையும், சகோதரத்துவமும், அன்பும் பெருகட்டும். இயேசுபிரானின் கொள்கைகளைப் பின்பற்றி, நல்லிணக்கமான சமுதாயத்தை உருவாக்குவோம் என ஆளுநர் கே.ரோசய்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி: டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் சிறுபான்மையினரின் கல்வி, அரசியல், சமூக, பொருளாதார நிலைகள் உயர பல்வேறு சட்டங்கள், ஆணைகளைப் பிறப்பித்து வந்துள்ளோம்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சென்னை கடற்கரைச் சாலையில் ஜி.யு. போப்பு, வீரமாமுனிவர், கால்டுவெல் ஆகியோருக்குச் சிலைகள், நெல்லை மாவட்டம் இடையன்குடியில் கால்டுவெல் நினைவு இல்லம் என கிறிஸ்தவ சமுதாய மக்களை மதித்துப் போற்றியது திமுக.
கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பாதிக்கும் வகையில் டிசம்பர் 25-ஆம் தேதியை நல்லாட்சி தினம் என அறிவித்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இத்தகைய அணுகுமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: அன்பு, சமாதானம்,இரக்கம் ஆகியவற்றின் புகலிடமான இயேசு பிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். அன்பால் அகிலத்தை வெல்லலாம் என்பதை போதித்தவர். அனைத்துக் குடும்பங்களிலும் அமைதி தவழ்ந்திட, ஒற்றுமை ஒங்கிட, ஒளிமயமான வாழ்வு அமைய பிரார்த்திக்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்: கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரில் பாஜக சார்பில் அப்துல்கனி ஹோலி வெற்றி பெற்றுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களையும் அரவணைத்துச் செல்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்.
இயேசு அவரித்த கிறிஸ்துமஸ் நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்: கிறிஸ்துமஸ் விழா என்பது அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளும் நாள். பேதங்களை மறந்து அனைவரையும் அரவணைக்கும் நாள். தன்னிடம் இருப்பதை இல்லாதோர்க்கு கொடுத்து மகிழும் நாள். பகைவரையும் நேசி என்றார் இயேசுபிரான்.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அடிப்படை கொள்கைக்கு வேட்டு வைக்கும் நிகழ்வுகள் தற்போது நடக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில் இயேசுபிரானின் போதனைகளைக் கடைப்பிடிக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: வீழ்ந்து கிடந்த மனிதரெல்லாம் விழிபெற்று ஒளி பெறுவதற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த உலகில் அவதரித்தவர் இயேசு பிரான். அவர் அவதரித்த இந்நாளை சமூக நல்லிணக்க விழாவாகக் கொண்டாட வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: அன்பு, கருணை, சகிப்புத் தன்மையின் அடையாளமான இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். ஏழைகளின துயரங்கள் அகல இந்நாளில் உறுதியேற்போம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: அல்லல்களும், இன்னல்களும் முற்றுகையிடும் மனித வாழ்க்கையில் மனிதநேயத்தாலும் அன்பாலும் மனக்காயங்களுக்கு மருந்துபோடும் அமுத மொழிகளை உபதேசித்தவர் இயேசுபிரான். தமிழகத்தில் இயேசு திருச்சபையினர் தமிழ் மொழிக்கும், ஏழைகளுக்கும் ஆற்றிய சேவை ஈடற்றது. உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்: அன்பும், அறமும் மனிதநேயத்துக்கான அடிப்படை என்பதை இயேசு பிரான் போதித்தார். மதம், ஜாதியின் பெயரால் வெறுப்பை விதைப்பது கூடாது என பிரசாரம் செய்தார். சமூகத்தை அச்சுறுத்தும் வகையில் பகையை மூட்டி ஆதாயம் தேடுபவர்களை காலம் அம்பலப்படுத்தும் என்ற நம்பிக்கையோடு இயேசுபிரான் காட்டிய வழியில் மனிதநேயத்தை மேம்படுத்த இந்நாளில் உறுதியேற்போம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், சு. திருநாவுக்கரசர், டி. ராஜேந்தர் உள்ளிட்டோர் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.