இன்று மாலையே ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட முன்வடிவு.
ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட முன்வடிவை நிறைவேற்ற இன்று மாலை 5 மணிக்கு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் தனபால் சற்று முன் அறிவித்துள்ளார்.,
இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கவர்னர் உரை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர், ஜல்லிக்கட்டு அவசரச் சட்ட முன்வடிவை நிறைவேற்ற இன்று மாலை 5 மணிக்கு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் சட்டப்பேரவை கூட்டத் தொடரை பிப்ரவரி 1-ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். மறைந்த ஜெயலலிதா, பர்னாலா ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். வரும் 27, 30, 31 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும். பிப்ரவரி 1-ம் தேதி ஆளுநர் உரைக்கு முதல்வர் பதில் அளிக்கிறார் என்று கூறினார்.