தனது அரசியல் வருங்கால செயல்பாடு குறித்த முக்கிய முடிவை இன்று அறிவிக்க இருப்பதாக மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று கோவை வந்த ஜி.கே.வாசன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த மூன்று நாள்களாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறேன். அவர்கள் தங்களின் எண்ணங்கள், வியூகங்கள், வருங்கால வளர்ச்சிக்கான செயல்பாடு குறித்த கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவர்களின் கருத்தை மொத்த கருத்தாக்கி, இறுதி முடிவாக திங்கள்கிழமை அறிவிக்க உள்ளேன்.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியமானவர் காமராஜர். கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், தொண்டர்கள் காமராஜரின் பாசறையில் வளர்ந்தவர்கள். அதைத் தொடர்ந்து மூப்பனார், மறைந்த தலைவர்களின் வழியில் நடந்தவர்.
இவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றால் புதிய பாதையை வகுத்து, அதன் அடிப்படையில் இயக்கம் வலுப்படுத்த வேண்டும். அதற்கான இறுதி வடிவத்தைக் கொடுக்கும் வகையில், அவர்களின் எண்ணங்கள் பிரதிபலிக்கப்படும்.
இந்தப் புதிய பாதை வெற்றிப் பாதையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த வெற்றிப் பாதைக்கு உண்டான வழி, நோக்கம் ஆகியவை மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துமா என்பதை அறிந்து, நியாயத்தின் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்படும்.
காமராஜர் ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்பதே பெரும்பாலான கட்சியினரின் கருத்தாக உள்ளது. அதற்குண்டான பாதை தெளிவானதாக இருக்க வேண்டும். அந்தத் தெளிவான பாதை என்ன என்பதை அவர்கள் தெளிவுபடுத்தி வருகின்றனர். அந்த வகையில் புதிய பாதை குறித்து முடிவு அறிவிக்கப்படும்.
தமிழக மீனவர்கள் பிரச்னையில் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து ஆக்கப்பூர்வ முயற்சி எதையும் எடுக்கவில்லை. மேலும், தமிழக மக்களின் எண்ணங்களுக்கு நேர்மாறாகச் செயல்பட்டு வருகிறது.
இலங்கை நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழர்களின் தண்டனையை ரத்து செய்து, அவர்களின் விடுதலைக்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும், இவ்வறு ஜி.கே.வாசன் கூறினார். இன்று தாமக ஆரம்பமாவது குறித்து முக்கிய முடிவை ஜி.கே.வாசன் அறிவிப்பார் என கூறப்படுகிறது. ஆனால் அவர் கட்சியை விட்டு வெளியேறமாட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.